|
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான்- தகுதியுடையவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈயும் இயல்பில்லாதவனாய்; தான்துவ்வான் -அதன்மேல் தானும் நுகராதவனாயிருப்பவன்; பெருஞ்செல்வம் ஏதம் -அவ்விரண்டுஞ் செய்தற் கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன். செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோய் போற் கெடுத்தலின், ' நோய் ' என்றார். ' தக்கார் ' அந்தணர்,அடியார்,புலவர் முதலியோர் ' தக்கார் என்றதனால் , ' தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். ' ஏதம்' ஆகுபெயர். எச்சவும்மை தொக்கது.இனி, அவ்விரு பயனும் கொள்ளாதவனது பெருஞ் செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்த தன்று.
|
|
கலைஞர் உரை:
|
|
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்தச் செல்வத்தைச் சேர்ப்பதிலும் துன்பம்; பாதுகாப்பதிலும் துன்பம்; உதவியற்ற செல்வமென்று ஊரார் பழிப்பதும் துன்பம். ஆகையினால்) தானும் அனுபவிக்காமல் தகுதியுடைய பிறருக்கும் கொடுக்காமல் சேர்த்து மட்டும் வைக்கிறவ னுடைய பெருஞ் செல்வம் அவனுக்கு வெறும் துன்பந்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தான் நுகர்ந்து அனுபவியானாகி தகுதியுடையவர்களுக்குக் கொடுப்பதென்னும் ஈகையும் செய்யாதவனால், அவன் அந்த இரண்டும் செய்வதற்குரிய செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தான் உண்டு மகிழாமல் தக்கார்க்கு ஒன்று கொடுத்தும் உதவாமல் இருப்பவனுடைய செல்வம் அவனுக்கே கேடாக அமையும்.
|
|
Translation
|
|
Their ample wealth is misery to men of churlish heart,
Who nought themselves enjoy, and nought to worthy men impart.
|
|
Explanation
|
|
He who enjoys not (his riches) nor relieves the wants of the worthy is a disease to his wealth.
|
|
Transliteration
|
|
Edham Perunjelvam Thaandhuvvaan Thakkaarkkondru
Eedhal Iyalpilaa Thaan
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|