Thirukural

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஒருவரான் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல் - தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?(ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ் ஈவான் மேலன்றி நில்லாமையின்,அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லைஎன்பார், 'என் எண்ணுங்கொல்லோ' என்றார். ஓகாரம் - அசை. இவைமூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படலின்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
ஒருவராலும் நச்சப்படாத செல்வமுடையவன், தனக்குப் பின்பு நிற்பதென்று யாதினை எண்ணுமோ?. இது புகழில்லையா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
ஒருவரால் நச்சப்படாதவன் - ஒரு பொருளும் ஈந்தறியாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கால் - தனக்குப் பின் தன்னை மகிழ்ச்சியுடன் நினைப்பிக்குமாறு எஞ்சி நிற்பதாக எதனைக் கருதுவானோ? மக்கள்,பொருள்,புகழ் என்னும் மூவகை யெச்சங்களுள், புகழே சிறந்ததாதலின் , ' என்னெண்ணுங் கொல்லோ ' என்றார். ஓகாரம் அசைநிலை. ' கொல் ' ஐயப் பொருளிடைச் சொல். 'படா.அ' இசைநிறை யளபெடை.இழிவு சிறப்பும்மை தொக்கது.
கலைஞர் உரை:
யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(புண்ணியமும் புகழுந்தான் மனிதனுக்குச் சிறப் பளிப்பன. புண்ணியத்தை நம்பாவிட்டாலும் புகழையாவது தேட வேண்டும்) ஒருவராலும் விரும்பப்படாத உலோபி தனக்குப் பின்னால் உலகம் தன்னைப்பற்றி என்ன சொல்லும் என்பதைச் சிந்திப்பதில்லையே!
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஈதல் தன்மை இல்லாததால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்பதாக எதனை எண்ணுவானோ?
தமிழ்க்குழவி உரை:
பிறரால் விரும்பப் படாமல் வாழ்ந்து மடிந்து போகும் ஒருவன் தன் காலத்திற்குப்பின் எஞ்சி நிற்பதாக எதை எண்ணுவான்?
Translation
Whom no one loves, when he shall pass away, What doth he look to leave behind, I pray?.
Explanation
What will the miser who is not liked (by any one) regard as his own (in the world to come) ?.
Transliteration
Echchamendru Enennung Kollo Oruvaraal Nachchap Pataaa Thavan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 1004