|
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது - தன்னையிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆகலான், பிறர் பாடு அறிந்தொழுகுவார் மாட்டுப் பகைமை உள் வழியும் அஃது உளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன. ('பாடறிவார்' எனவே , அவ்வின்னாமையறிதலும் பெற்றாம். அதனை அறிந்தவர் பின் அது செய்யார்; இனியவே செய்வார் என்பது கருத்து. இதற்குப் பிறரெல்லாம் இரண்டு தொடரும் தம்முள் இயையாமல் உரைப்பாரும், 'இன்னாது' என்னும் சொற்குப் பிறவாது என்று உரைப்பாரு மாயினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்னை யிகழ்தல் ஒருவற்கு விளையாட்டின்கண்ணும் இன்னாது: ஆகலாற் பிறர் பாடறிந் தொழுகுவார்மாட்டுப் பகைமையுள் வழியும் அஃதுளதாகாது இனியவாய பண்புகளே உளவாவன.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நகையுள்ளும் இகழ்ச்சி இன்னாது -விளையாட்டாகவேனும் ஒருவரைப் பற்றிப் பழித்தல் அவருக்குத் துன்பந்தருவதாம்; பாடு அறிவார் மாட்டுப் பகையுள்ளும் பண்பு உள - ஆதலாற் பாடறிந்தொழுகுவாரிடத்திற் பகைமையுள்ள போதும் இனிய பண்புகளே உண்டாவன. பாடறிந்தொழுகுவார் பிறருக்குத் துன்பந்தருவதை விலக்குவராதலின், பகைவருக்கும் நன்மையே செய்வார் என்பது கருத்து. உம்மைகள் இழிவு சிறப்பு.
|
|
கலைஞர் உரை:
|
|
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
விளையாட்டில் விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
பிறருடைய துன்பங்களை அறிந்தவர்களான பண்பு டையார், பகைவர்களுக்கும் இரக்கத்தோடு இகழாமல் உதவி செய்வார்கள். பண்புடையவர்களுக்கு விளையாட்டாகக்கூடப் பிறரை இழிவாக நடத்துவது துன்பமான காரியம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன்னை இகழ்தல் என்பது ஒருவற்கு விளையாட்டின் கண்ணும் துன்பம் தருவதாகும். ஆதலால் பிறருடைய தன்மையறிந்து நடப்பவரிடத்தில் பகையுள்ள போதும் இனிமையான நற்பண்புகள் இருப்பனவாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
விளையாட்டுக்காக கூட ஒருவரை இகழ்ந்து பேசுதல் துன்பம் தரும், அன்புடன் பழகுவதாயின் பகைவர் களிடம் கூட நல்ல பண்புகள் இருப்பதைக் காணலாம்
|
|
Translation
|
|
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.
|
|
Explanation
|
|
Reproach is painful to one even in sport; those (therefore) who know the nature of others exhibit (pleasing) qualities even when they are hated.
|
|
Transliteration
|
|
Nakaiyullum Innaa Thikazhchchi Pakaiyullum
Panpula Paatarivaar Maattu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|