|
நீதியையும் நன்மையையும் விரும்பிப் பிறர்க்குப் பயன்பட வாழும் பெரியோரின் நல்லப் பண்பை உலகத்தார் போற்றிக் கொண்டாடுவர்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நீதியையும் அறத்தையும் விரும்புதலால் பிறர்க்கும் தமக்கும் பயன்படுதல் உடையாரது பண்பினை; உலகு பாராட்டும் - உலகத்தார் கொண்டாடா நிற்பர். ('புரிந்த' என்னும் பெயரெச்சம் ஈண்டுக் காரணப் பொருட்டு. நயனொடு நன்றி புரிதலும் பயனுடைமையும் பண்பு காரணமாக வந்தமையின், அதனைப் 'பாராட்டும்' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நீதியையும் அறத்தையும் விரும்புதலாற் பிறர்க்குந் தமக்கும் பயன்படுதலுடையாரது பண்பினை உலகத்தார் கொண்டாடா நிற்பர்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார் பண்பு - நேர்பாட்டையும் (நீதியையும்) நல்வினையையும் விரும்புதலாற் பிறர்க்குப் பயன்படும் நல்லோர் பண்பை; உலகு பாராட்டும்-உலகத்தார் போற்றிப் புகழ்வர். ' புரிந்த ' என்னும் பெயரெச்சம் கரணியப்பொருளது, நயனொடு நன்றிபுரிந்த பயனுடையார் ' உலகிற்குப் பயன் படுதலாலும் ஒரு சிலரேயாதலும் ' உலகுபாராட்டும் என்றார். உலகு ஆகுபெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
யாருக்கும் இரக்கமுள்ளவர்களாக உதவியும் செய்து பயன்பட வாழ்கின்றவர்களுடைய பண்புக் குணத்தைத்தான் உலகம் பாராட்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நீதியையும் அறத்தினையும் விரும்பி பிறர்க்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை உலகத் தார் கொண்டாடி நிற்பர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஆர்வத்துடன் பிறர்க்கு நன்மை செய்து பயன்பட வாழ்வோரின் பண்பு நலன்களை இவ்வுலகம் பாராட்டி மகிழும்
|
|
Translation
|
|
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'
|
|
Explanation
|
|
The world applauds the character of those whose usefulness results from their equity and charity
|
|
Transliteration
|
|
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|