Thirukural

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்விதுலையல்லார் கண்ணும் கொளல்.

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சால்பிற்குக் கட்டளை யாது எனின் - சால்பாகிய பொன்னின் அளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாது எனின்; தோல்வி துலை அல்லார்கண்ணும் கொளல் - அது தம்மின் உயர்ந்தார் மாட்டுக் கொள்ளும் தோல்வியை இழிந்தார் மாட்டும் கோடல். (துலை - ஒப்பு. எச்ச உம்மையான் இருதிறத்தார் கண்ணும் வேண்டுதல் பெற்றாம். கொள்ளுதல் - வெல்லும் ஆற்றலுடையராயிருந்தே ஏற்றுக் கொள்ளுதல். இழிந்தாரை வெல்லுதல் கருதித் தம்மோடு ஒப்பித்துக் கொள்ளாது, தோல்வியான் அவரினும் உயர்வராயின், அதனால் சால்பளவு அறியப்படும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
சால்பாகிய பொன்னினளவறிதற்கு உரைகல்லாகிய செயல் யாதெனின், அது தம்மினுயர்ந்தார் மாட்டுக் கொள்ளுந் தோல்வியை இழிந்தார் மாட்டுங் கோடல்.
தேவநேயப் பாவாணர் உரை:
சால்பிற்க கட்டளை யாது எனின் - சான்றாண்மை யென்னும் பொன்னின் மாற்றை யறியதற்கு உரைகல்லாகிய செயல் எதுவெனின் ; துலை அல்லார்கண்ணும் தோல்வி கொளல் - தம்மினும் வலியாரிடத்துத் தாம் அடையுந் தோல்வியைத் தம்மினும் மெலியாரிடத்துமே விரும்பி ஏற்றுக் கொள்ளுதல். துலை ஒப்பு. 'துலையல்லார்' என்னும் பகைவர்நிலையாலும் 'கொளல்' என்னும் வினையினாலும், தாமே விட்டுக் கொடுத்து வேண்டுமென்றே தோல்வியடைந்து கொள்ளுதல் பெறப்பட்டது. இது, வளர்ந்தவனொருவன் ஒரு குழந்தை தன்னை அடிக்கும்பொழுது, அதைப் பொறுத்துக் கொள்வது அல்லது விரும்பியேற்றுக்கொள்வது போல்வது. வலியொத்த பகைவர் வெல்வதற்கு இடமிருத்தலின், அவரிடம் ஏற்றுக்கொள்ளும் தோல்வியாற் சால்பு வெளிப்படாமை நோக்கித் ' துலையல்லார்கண்' என்றார். உம்மை இழிவு கலந்த எச்சம்.
கலைஞர் உரை:
சமநிலையில் இல்லாதவர்களால் தனக்கு ஏற்படும் தோல்வியைக்கூட ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவம்தான் ஒருவரின் மேன்மைக்கு உரைகல்லாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சான்றாண்மை என்னும் பொன் போன்ற குணத்தில் மாற்றறியும் உரைகல் எதுவென்றால், தமக்குச் சமானமில்லாத சிறியவர்களிடத்தில் தோற்றுப்போனாலும் அதைக் கண்ணியமாக ஒப்புக்கொள்வது.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
சால்பாகிய பொன்னினை அளந்தறியும் உரை கல்லாகிய செயல் யாது என்றால், தம்மைவிட உயர்த் தாரிடம் கொள்ளுவதாகிய தோல்வியை இழிந்தார் மாட்டும் கொள்ளுதலாகும்.
தமிழ்க்குழவி உரை:
சான்றாண்மைக்கு உரைகல் யாதெனில், தன்னைவிடத் திறமை குறைந்தவர்களிடம் கூட தோல்வியைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்ளும் பண்பு
Translation
What is perfection's test? The equal mind. To bear repulse from even meaner men resigned.
Explanation
The touch-stone of perfection is to receive a defeat even at the hands of one's inferiors.
Transliteration
Saalpirkuk Kattalai Yaadhenin Tholvi Thulaiyallaar Kannum Kolal

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 986