|
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று. (அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின்,எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்: குணநலம், பிற நலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று. இது குணநலம் சால்பிற்கு அழகென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களாலான நலமே; பிற நலம் எந்நலத்து உள்ளதும் அன்று - மற்ற உறுப்பு நலம் ஒரு நலத்தோடுங் கூட்டன்று. குடிப்பிறப்பு, கல்வி முதலியனவாக நூலோரால் வகுக்கப்பெறும் எந்நலத்தோடும் சேர்த்தெண்ணப் படாமையால், உறுப்பு நலத்தை 'எந்நலத் துள்ளதூஉ மன்று' என்றார். 'உள்ள தூஉம்' இன்னிசை யளபெடை; ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சான்றோர் என்பவர்க்கு அழகு, குறங்களால் ஆகிய அழகே; பிற புற அழகெல்லாம் எந்த அழகிலும் சேரா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
குணச்சிறப்பே சான்றோர்களுடைய செல்வம்; மற்றச் செல்வங்களை அவர்கள் எந்தச் சிறப்போடும் சேர்க்கமாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
சான்றோர்க்கு அழகாவது குணநலன்களாகிய அழகேயாகும். அது நீங்கி ஏனைய உறுப்பு முதலியன வற்றால் உண்டான அழகு எந்த அழகிலும் உள்ள தாகாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
சான்றோர்களின் சிறப்பு என்பது அவர்கள் தம் குண நலனே . குணநலத்திற் கப்பாற்பட்ட பிறநலன்கள் சிறந்தவைகளாகக் கருதப்படுவது இல்லை.
|
|
Translation
|
|
The good of inward excellence they claim,
The perfect men; all other good is only good in name.
|
|
Explanation
|
|
The only delight of the perfect is that of their goodness; all other (sensual) delights are not to be included among any (true) delights.
|
|
Transliteration
|
|
Kunanalam Saandror Nalane Piranalam
Ennalaththu Ulladhooum Andru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|