|
நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
செப்பமும் நாணும் ஒருங்கு - செம்மையும் நாணும் சேர; இற்பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை - குடிப்பிறந்தார் மாட்டல்லது பிறர்மாட்டு இயற்கையாக உளவாகா. (இல், குடி, என்பன ஈண்டு உயர்ந்தவற்றின் மேல, செம்மை - கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறாகாமை. நாண் - பழிபாவங்களின் மடங்குதல். இவை இற்பிறந்தார்க்காயின் ஒருவர் கற்பிக்க வேண்டாமல் தாமே உளவாம், பிறர்க்காயின் கற்பித்த வழியும் நெடிது நில்லா என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உயர்குடிப்பிறந்தார்மாட்டல்லது பிறர்மாட்டு நடுவு நிலைமையும், பழி நாணுதலும், இயல்பாக ஒருங்கே உண்டாகா. இஃது இல்பிறந்தார் இவையிரண்டும் இயல்பாக உடையரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
செப்பமும் நாணும் ஒருங்கு- ஒழுக்க நேர்மையும் பழிக்கு நாணுதலும் ஒருசேர; இல் பிறந்தார்கண் அல்லது இயல்பாக இல்லை- குடிப்பிறந்தாரிடத் தல்லது பிறரிடத்து இயற்கையாகவாகா. இங்கு இல் என்றது சேக்கிழார் குடிபோலுஞ் சரவடியை அல்லது சேர சோழ பாண்டியர் குடிபோலுங் கொடிவழியை. "நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி" (தொல்.கள.23) என்பதில் 'இல்' கொடிவழியையும் 'குடி' சரவடியையும், 'பிறப்பு' குடும்பத்தையும், 'சிறப்பு' அரசாளற்குரிமையையும் குறிக்கும். செப்பமாவது கருத்து சொல் செயலாகிய முக்கரணமும் தம்முள் முரணாத செம்மை. நாணென்பது பழிபளகம்(பாவம்) பற்றிய அச்சமும் அருவருப்பும் கொண்ட வெட்கம். இவை நல்ல குடிப்பிறந்தார்க்கு இயற்கையாக அமையும். பிறர்க்கு எத்துணைக் கற்பிப்பினும் அமையா.
|
|
கலைஞர் உரை:
|
|
நடுநிலை தவறாத பண்பும், ஆரவாரமற்ற அடக்க உணர்வும் கொண்டவர்களையல்லாமல் மற்றவர்களை உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருத முடியாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
சிறந்த குடும்பத்தில் பிறந்தவரிடம் மனம், சொல், செயல் மூன்றின் சுத்தமும், நாணமும் இயல்பாக இருப்பது போல் மற்றவரிடம் இருக்கமாட்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
உபகார குணம், பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கும் தன்மை ஆகிய இரண்டும் சேர்ந்திருப்பது வழக்கமாக நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடத்திலன்றி மற்றவர்களிடத்தில் இருப்பதில்லை.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நடுவு நிலைமையாகிய தன்மையும், நாணம் என்பதும் ஒன்று சேர்ந்து, உயர்ந்த குடியில் பிறந்தார்களிடம் அல்லாமல் மற்றவர்களிடம் இயற்கையாகவே உண்டாகாது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இயல்பாக நல்லொழுக்கமும் பழிக்கு நாணும் பண்பாடும் நற்குடியில் பிறந்தவர்களுக்கன்றி அமைவதில்லை.
|
|
Translation
|
|
Save in the scions of a noble house, you never find
Instinctive sense of right and virtuous shame combined.
|
|
Explanation
|
|
Consistency (of thought, word and deed) and fear (of sin) are conjointly natural only to the high-born.
|
|
Transliteration
|
|
Irpirandhaar Kanalladhu Illai Iyalpaakach
Cheppamum Naanum Orungu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|