Thirukural

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்நோயள வின்றிப் படும்.

பசித்தீயின் அளவின் படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால் , அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்ப்பட்டு விடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின் - தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது, வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து, வயிற்றுத் தீ அளவன்றி ஒருவன் உண்ணுமாயின்; நோய் அளவு இன்றிப் படும் - அவன் மாட்டு நோய்கள் எல்லையற வளரும். (தெரியாமை வினைக்குச் செயப்படு பொருள்கள் அதிகாரத்தான் வந்தன. நோய் - சாதியொருமை. இவை இரண்டு பாட்டானும் அவ்வகை உண்ணாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பசியின் அளவின்றி ஆராயாதே மிகவுண்பானாயின் மிகநோய் உண்டாம். இது, நோய் தீர்ந்தாலும் பசியளவு அறியாதே உண்பானாயின் மீண்டும் நோயா மாதலான் அளவறிந்து உண்ணல் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தெரியான் தீ அளவு அன்றிப் பெரிது உண்ணின்- ஒருவன் தன் உடற்கூற்றையும் அதற்கேற்ற வுணவையும் அதையுண்ணுங் காலத்தையும் அறியாது, தான் விரும்பிய வுணவுகளையெல்லாம் விரும்பியபொழுதெல்லாம் தன் பசியளவிற்கு அல்லது செரிமான ஆற்றலுக்கு மேற்பட்டுப் பேரளவாக உண்பானாயின்; நோய் அளவு இன்றிப்படும்- அவனிடத்துப் பல்வகை நோயும் தோன்றி வளரும். தெரியாமை வினைக்குச் செயப்படுபொருள்கள் மேற்குறள்களிற் கூறப்பட்டவை. பசியெடுத்தல் தீயெரிதல் போன்றும் உண்டது செரித்தல் தீயால் எரிக்கப் படுதல் போன்றும் இருத்தலால், பசிஅல்லது செரிமான ஆற்றல் வயிற்றுத்தீ யெனப்படும். அவ்வழக்கு நோக்கித் 'தீயளவன்றி' என்றார்."வயிற்றுத் தீத்தணிய' (என்பதுங் காண்க) "கனல்வாதை வந்தெய்தின்" (தாயு-சச்சிதா.) என்று தாயுமானவரும் கூறுதல் காண்க. 'நோய்' வகுப்பொருமை. இக்குறளால் செரிமான ஆற்றலளவிற்குத் தக்கவாறு உண்ணவேண்டுமென்பது கூறப்பட்டது. 'தெரியான்' எதிர்மறை முற்றெச்சம்.
கலைஞர் உரை:
பசியின் அளவு அறியாமலும், ஆராயாமலும் அதிகம் உண்டால் நோய்களும் அளவின்றி வரும்.
சாலமன் பாப்பையா உரை:
தன் வயிற்றுப் பசி அளவு தெரியாமல் மிக அதிகமாக உண்டால் அவன் உடம்பில் நோய்கள் அளவு இல்லாமல் வளரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
சீரண சக்தியின் அளவுக்குத் தக்கபடி உண்ணாமல் தெரியாத்தனமாக மிதமிஞ்சி உண்டால் அளவில்லாத நோய்கள் உண்டாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பசியினளவும் சீரணிக்கும் அளவும் தெரியாத படி மிகுதியாக உண்ணுவானேயானால் அவனிடத்தில் நோய்கள் எல்லையற்று வளரும்.
தமிழ்க்குழவி உரை:
பசியின் அளவு தெரியாமல், வயிறு நிரம்ப ஒருவன் உண்பானாயின் மிகையான நோய்கள் தோன்றும்.
Translation
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
Explanation
He will be afflicted with numberless diseases, who eats immoderately, ignorant (of the rules of health).
Transliteration
Theeyala Vandrith Theriyaan Peridhunnin Noyala Vindrip Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 947