|
குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலைநிற்பது போல, மிகப்பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்க்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல் - அக்குறைதலை நன்று என்று அறிந்து அவ்வாறே உண்பவன் மாட்டு இன்பம் நீங்காது நிலை நிற்குமாறு போல; கழிபேரிரையான்கண் நோய் நிற்கும் - மிகப்பெரிய இரையை விழுங்குவான் மாட்டு நோய் நீங்காது நிலைநிற்கும்.(அவ்வாறே உண்டல் - உண்ணலாம் அளவில் சிறிது குறையஉண்டல். இன்பமாவது வாதமுதலிய மூன்றும் தத்தம் நிலையில் திரியாமையின் மனம் மொழி மெய்கள் அவன் வயத்தவாதலும், அதனான் அறம் முதலிய நான்கும் எய்தலும் ஆம். இரையை அளவின்றி எடுத்து அதனான் வருந்தும் விலங்கொடு ஒத்தலின் 'இரையான்'என்றார். விதி எதிர்மறைகளை உவமமும் பொருளும் ஆக்கியது இரண்டானும் பெறுதற்கு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறும் அளவறிந்து உண்பவன்கண் இன்பம்போல உண்டாம், மிக உண்பான்கண் நோய்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல்- குறைத்துண்பதன் நன்மையைப் பட்டறிவாலறிந்து அம்முறையை நெடுகலும் கடைப்பிடிப்பவனிடத்து இன்பம் நிலைத்து நிற்பதுபோல்; கழிபெரு இரையான்கண் நோய்நிற்கும்- மிகப் பேரளவாக வுண்பவனிடத்து நோய் நிலைத்து நிற்கும், இழிவென்றது இன்றியமையாத அளவிற்கு மேற்பட்டதின் நீக்கத்தையே. இன்பமாவது உணவுச்சுவை மிகுதலும், எளிதாயியங்கி வினை செய்தலும், ஊதை பித்த கோழைகள் தத்தம் அளவில் நிற்றலால் ஒருவகை நோயுமின்மையும், ஏனையின்பங்களையும் நுகர்தலும், மனமகிழ்ச்சியுமாம். 'கழிபெரு' மீமிசைச் சொல். 'இரை' யென்பது விலங்கினுந் தாழ்ந்த பறவை யூரிகளின் உணவைக் குறிக்குஞ் சொல்லாதலால், இங்கு இழிவு குறித்து நின்றது. 'கழிபேரிரையான்' என்பதை மிடாவிழுங்கி என்பது போலக் கொள்க. 'நோய்' வகுப்பொருமை. அளவூணின் நன்மையும் மிகையூணின் தீமையும் இங்கு ஒருங்கு கூறப்பட்டன. மிகையூண் என்பது அளவு மிகுதியையன்றி வேளை மிகுதியையுங் குறிக்கும். ஒருபொழு துண்பானே ஓகியொரு நாளில் இருபொழு துண்பான்நன் றாகி-வருபொழுது முப்பொழு துண்பானேல் நோகியாம் நாற்பொழுது கப்புவான் சாகி கடிது.
|
|
கலைஞர் உரை:
|
|
அளவோடு உண்பவர் உடல் நலமுடன் வாழ்வதும் அதிகம் உண்பவர் நோய்க்கு ஆளாவதும் இயற்கை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
குறைவாக உண்பதே நல்லது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் விலகாமல் இருப்பது போல் மிக அதிகமாக விழுங்குபவனிடம் நோய் விலகாமல் இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
மலசலக் கழிவுகளையும் கவனித்து அதற்குத் தக்கபடி உண்கிறவனிடத்தில் தேக ஆரோக்கிய இன்பம் குடி கொண்டிருக்கும். (மலசலம் சரியாகக் கழியாமலும்) மேலும் மேலும் உண்டு வயிற்றை அடைக்கிறவனிடத்தில் நோய் குடி கொண் டிருக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
குறைவாக உண்பதை நல்லதென்று அறிந்து உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பதைப் போல, மிகப்பெரிய இரையை விழுங்குகிறவனிடம் நோய் நீங்காமல் நிலைத்து நிற்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செரிமானம் அறிந்து உண்பவனுக்கு இன்பம் உண்டாவது போல, மிகையாக உண்டு மகிழ்பவனுக்கு நோய் ஏற்படும்.
|
|
Translation
|
|
On modest temperance as pleasures pure,
So pain attends the greedy epicure.
|
|
Explanation
|
|
As pleasure dwells with him who eats moderately, so disease (dwells) with the glutton who eats voraciously
|
|
Transliteration
|
|
Izhivarindhu Unpaankan Inpampol Nirkum
Kazhiper Iraiyaankan Noi
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|