|
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம் போல், உடல் துன்பப்பட்டு வருந்ந வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் - சூதாடலான் இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற் காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும் அனுபவிக்குந்தோறும் அதன்மேற் காதலை உடைத்து உயிர். (சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார் போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின், அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவமமாக்கிக் கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க, இதனான் இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும் கூறப்பட்டன.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருளை இழக்குந்தோறும் பொருளைக் காதலிக்கும் சூதுபோலத் துன்பத்தை உழக்குந்தோறும் இன்பத்திலே காதலுடைத்து உயிர். இவை இரண்டினுக்கும் அஃதியல்பு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல்-பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை மீட்டற் பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின் மேற்பற்று வைக்குஞ் சூதன்போன்றே; உயிர் துன்பம் உழத்தொறும் காதற்று-ஆதன்(ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங்களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மையதாம். உயிர்வினையை உவமமாகவும் சூதன் வினையைப் பொருளாகவுங் கூறுவதே அதிகார முறையாயினும், முன்னதன் முதன்மை பற்றி மாற்றிக் கூறினார். இங்ஙனம் இருவகைக் காதலையுங் கூறியது பெரும்பான்மைபற்றியாகலின், உடம்பை வெறுத்துத் துறவுபூணுவதும் சூதை வெறுத்து நல்வழிப்படுத்துவதும் சிறுபான்மை யுண்டென வறிக. துன்பப்படுந்தொறும் உடம்பின்மேற் பற்றுவைப்பது எதிர்காலத்திலேனும் இன்பநுகரலாம் என்னும் நம்பாசைபற்றி. 'தொறூஉம்' ஈரிடத்தும் இன்னிசையளபெடை. 'சூது' ஆகு பொருளது; உயிருக் கொத்தவன் சூதனேயாதலின். சூதன் சூதாடுவோன். ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
பொருளை இழக்க இழக்கச் சூதாட்டத்தின் மீது ஏற்படுகிற ஆசையும், உடலுக்குத் துன்பம் தொடர்ந்து வரவர உயிர்மீது கொள்ளுகிற ஆசையும் ஒன்றேதான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துன்பத்தை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த உடம்பின் மேல் உயிருக்குக் காதல் பெருகுவது போல, சூதாடிப் பொருளை இழந்து துன்பப்படும் போதெல்லாம் சூதாட்டத்தின் மேல் ஆசை பெருகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(எவ்வளவு தோற்றுவிட்டாலும் சூதாட்ட ஆசைவிடாது.) உடல் நோய் அதிகரிக்க அதிகரிக்க உயிருக்கு உடம்பின் மீதுள்ள ஆசையும் அதிகரிப்பதைப் போலத் தோற்கத் தோற்கச் சூதாடுகிற வனுக்குச் சூதாட்டத்தின் மேல் ஆசை அதிகரிக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இழக்குந்தோறும் அச்சூதின் மேல் காதல் செய்யும் சூதினைப்போல உடம்பால் துன்பம் அனுபவிக்குந்தோறும் அதன்மேல் உயிர் காதலை உடைத்தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பங்களுக்கு உள்ளானாலும் உயிர் உடம்பை நேசிப்பது போல, இழப்புகளுக்கு ஆளானாலும், சூதாடு சுகம் கண்டவனுக்கு மனம் அதையே நாடும்.
|
|
Translation
|
|
Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.
|
|
Explanation
|
|
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.
|
|
Transliteration
|
|
Izhaththoru�um Kaadhalikkum Soodhepol Thunpam
Uzhaththoru�um Kaadhatru Uyir
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|