|
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறஞ்செய்தலும் அமைந்த பொருள் செய்தலும் ஒழிந்த காமம் நுகர்தலும் பெண்ணேவல் செய்வார்மாட்டு இல்லையாம். இஃது அச்சமில்லாராயினும் சொன்னது செய்வாராயின் இம்மூன்று பொருளும் எய்தார் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அறவினையும்-அறச்செயலும்; ஆன்ற பொருளும்-அதைச் செய்தற்கு வேண்டிய பொருள் முயற்சியும்;பிறவினையும்- அவ்விரண்டின் வேறான இன்ப நுகர்ச்சிகளும்; பெண் ஏவல் செய்வார்கண் இல்- தம் மனைவிக்கு அடங்கி நடப்பவரிடம் இல்லனவாம். பெண்ணின்பம் நோக்கி அறத்தையும் பொருளையுங் கைவிட்டவர்க்குப் பின்பு மனைவியே ஏவல் கொள்ளும் தலைவியாதலின், அவளாற் பெறக்கூடிய இன்பமும் இல்லாமற்போம் என்பதாம். முப்பொருள்களுள் அறத்தையும் பொருளையுங் கிளந்து கூறிவிட்டதனால், 'பிறவினை' என்றது இன்பவினைகளை யென்பது அறியப்படும்.புலன் ஐந்தாதலால் இன்பவினைகளும் ஐந்தாதல் பற்றிப் 'பிறவினை' யெனப் பன்மையாற் கூறினார். "கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்டொடி கண்ணே யுள." (குறள்.1101) என்று ஆசிரியரே கூறுதல் காண்க.பெண்ணேவல் செய்வார்க்கு முப்பொருட்பேறும் இல்லையென்று இதனாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அதனால்) தர்ம காரியங்களும், பொருள் சம்பாதிக்கும் திறமையும், அவற்றால் வரும் இன்பம் முதலிய பலன்களும் பெண்ணேவல் செய்கிறவர்களுக்கு இருக்கமாட்டா.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அறச் செயலும் அது முடித்ததற்குக் காரண மான பொருட்செயலும், இவ்விரண்டிற்கும் வேறான இன்பச் செயலும் தனது மனையாளுக்கு ஏவல் செய் பவரிடத்தில் உண்டாகா.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பெண் ஏவல் கேட்டு நடக்கும் பேதையார் வாழ்வில் அறச்செயல்களும், அதற்கான பொருள் தேடலும், பிற நல்வினைகளும் அமைவதில்லை.
|
|
Translation
|
|
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.
|
|
Explanation
|
|
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
|
|
Transliteration
|
|
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum
Peneval Seyvaarkan Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|