Thirukural

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்.

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - நீதியை அறிதல் இல்லாத, அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்குச் சேண் இன்பம் இகவா - அவரைச் செறுவார்க்கு உயர்ந்த இனபங்கள் நீங்கா. (உபாயம் அறிதலும் அறிந்தால் செய்து முடிக்கும் திண்மையும் இல்லாதாரே பகைவராதல் கூடாமையின் 'பெறின்' என்றும், அவரை அறிந்து மேற்சென்ற பொழுதே பகையின்மையும் செல்வமும் ஒருங்கே எய்தலின், 'சேணுடை இன்பங்கள் இகவா' என்றும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
அறிவில்லாத அச்சமுடைய பகைவரைப் பெறின் அவரைச் செறுவார்க்கு இன்பம் தூரப்போகாது, அணித்தாக வரும். அறிவு- காரியவறிவு.
தேவநேயப் பாவாணர் உரை:
அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - அரசியல் அறிவில்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்கு இன்பம் சேண் இகவா - அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றியின்பங்கள் தொலைவில் நீங்கி நில்லா. ஆம்புடை யறிதலும் அறிந்தாற் செய்து முடிக்கும் மனத்திண்மையுங் ஒருங்கேயில்லாத பகைவரைப் பெறுதல் அரிதாதலின் ’பெறின்’ என்றும், அவரைச் செறுவார்க்கு வெற்றி நெருங்கி நிற்றலின் ’சேணிகவா’ என்றும் கூறினார். பரிமேலழகர் சேணின்பம் எனக்கூட்டி ’உயர்ந்த இன்பங்கள்’ எனப் பொருளுரைப்பர். அதுவும் பொருந்துவதே. ஆயின், ஆசிரியர் கருத்ததுவாயின் ’செறுவார்க்குச் சேணின்பம் நீங்கா என்று யாத்திருக்கலாம். ’அறிவிலா அஞ்சும்’ பெயரெச்ச வடுக்கு. ’இன்பம்’ பால்பகா வஃறினைப் பெயர். வெற்றி, பொருட்பேறு, வலிமிகை, பாடாண் புகழ் முதலியன பல்வேறு இன்பங்களாம்.
கலைஞர் உரை:
அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதியை அறியும் அறிவற்ற, எதற்கும் அஞ்சுகிற பகைவரைப் பெற்றால், அத்தகைய பகைவரைப் பெற்றவர்களை விட்டுச் சிறந்த நன்மைகள் விலக மாட்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
நல்லறிவும் இல்லாமல் அச்சமும் உள்ளவர்கள் கிடைத்தால் பகைவர்களுக்கு எல்லையற்ற இன்பமுண்டாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
நீதியை அறிந்திராத அஞ்சுகிற பகைவரைப் பெற்றால் அவரை வெல்லுபவர்களுக்கு உயர்வான இன்பங்கள் நீங்காமல் இருக்குமாம்.
தமிழ்க்குழவி உரை:
அறிவில்லாத அஞ்சும் தன்மையுடைய பகைவனா யிருந்தால், அவனை வெல்ல முனைவார்க்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை.
Translation
The joy of victory is never far removed from those Who've luck to meet with ignorant and timid foes.
Explanation
There will be no end of lofty delights to the victorious, if their foes are (both) ignorant and timid.
Transliteration
Seruvaarkkuch Chenikavaa Inpam Arivilaa Anjum Pakaivarp Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 869