|
ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
வழிநோக்கான் - ஒருவன் நீதிநூலை ஓதான்; வாய்ப்பன செய்யான் - அது விதித்த தொழில்களைச் செய்யான்; பழி நோக்கான் - தனக்கு வரும் பழியைப் பாரான்; பண்புஇலன் - தான் பண்புடையன் அல்லன்; பற்றார்க்கு இனிது - அவன் பகைவர்க்கு அப்பகைமை இனிது. (தொல்லோர் அடிப்பட வழங்கி வந்ததாகலான் 'வழி' என்றும் , தப்பாது பயன்படுதலின் 'வாய்ப்பன' என்றும் , இக்குற்றங்களுடையான் தானே அழிதலின் 'பற்றார்க்கு இனிது' என்றும் கூறினார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவினை செய்யத்தொடங்குங்கால் பின் வருவன பாரான், பயன்படுவனவற்றைச் செய்யான், அதனால் உறும் பழியைப் பாரான், குணமுமிலன்; இவன் பகைமை பகைவர்க்கு இனிது. இஃது இவன் பகைமையால் பகைவர்க்கு இனிமை உண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
வழிநோக்கான்-வினைகளைச் செய்யும் வழிகளை ஆய்ந்தறியாதவனாகவும்; வாய்ப்பன செய்யான்- தப்பாது வாய்க்கும் வினைகளை மேற்கொள்ளாதவனாகவும்; பழிநோக்கான்-தீயன செய்யின் தனக்கு வரும் பழியைக் கருதாதவனாகவும்; பண்பு இலன்-பிறரியல்பையறிந்து அதற்கேற்ப நடக்கும் நற்குணமில்லாதவனாகவும் இருப்பவனது பகை; பற்றார்க்கு இனிது-அவன் பகைவர்க்கு இனிதாகும். "பண்பெனப் படுவது பாடறிந்த தொழுகல்." (கலித்.133), வெல்வது எளிதாகவும் வெற்றியால் வரும் பொருள் பெரிதாகவும் இருத்தலால் ’பற்றார்க்கினிது’ என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீதி நூல்கள் சொல்லும் வழியைப் படித்து அறியாத, நல்லனவற்றைச் செய்யாத, அவை தெரியாமலே செயலாற்றுவதால் வரும் வழியையும் எண்ணாத, நல்ல பண்புகளும் இல்லாத அரசின் பகைமை, பகைவர்க்கு இனிது.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வென்றுவிட்ட பகைவர்கள் தாம் ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டதாக மகிழ்ச்சிகொள்ளும்படியான குற்றமுள்ளவன் இலக்கணம் :) நீதிநெறி முறைகளை மதிக்காதவனாகவும், நியாயத்துக்கு ஒத்த காரியங்களைச் செய்யாதவனாகவும், பழிபாவங்களுக்கு அஞ்சாதவனாகவும், நல்ல குணமில்லாதவனாகவும் உள்ளவனைத் தோற்கடிப்பதில் அவனுடைய பகைவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் நீதி நூல்களைக் கற்காமலும், அவை விதித்த நெறிமுறைகளைச் செய்யாமலும் தனக்கு வரும் பழிகளைப் பாராமலும் தான் பண்புடையவன் அல்லா மலும் இருந்தால் அவனுடைய பகைவர்க்கு அவனது ங்கைமை இனிதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வழிமுறைகளை உணராதவனை வாய்ப்புகளைப் பயன்படுத்த அறியாதவனை, பழிகள் கருதாதவனை, பண்பு இல்லாதவனை, பகைவர்கள் எளிதில் வெல்வர்
|
|
Translation
|
|
No way of right he scans, no precepts bind, no crimes affright,
No grace of good he owns; such man's his foes' delight.
|
|
Explanation
|
|
(A) pleasing (object) to his foes is he who reads not moral works, does nothing that is enjoined by them cares not for reproach and is not possessed of good qualities.
|
|
Transliteration
|
|
Vazhinokkaan Vaaippana Seyyaan Pazhinokkaan
Panpilan Patraarkku Inidhu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|