Thirukural

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு.

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு இலன் - ஒருவன் தன் சுற்றத்தின்மேல் அன்பிலன்; ஆன்ற துணை இலன் - அதுவேயன்றி வலிய துணையிலன்; தான் துவ்வான் - அதன் மேல் தான் வலியிலன் : ஏதிலான் துப்பு என்பரியும் - அப்பெற்றியான்மேல் வந்த பகைவன் வலியினை யாங்ஙனம் தொலைக்கும்? (சுற்றமும் இருவகைத் துணையும் தன்வலியும் இலனாகலின், அவன்மேற் செல்வார்க்கு வலி வளர்வதன்றித் தொலையாது என்பதாம். துவ்வான் - துவ்வினைச் செய்யான்.)
மணக்குடவர் உரை:
சுற்றத்தார்மாட்டு அன்புறுதலும் இலன்; வேற்றரசராகிய வலிய துணையும் இலன்: ஆதலான், தான் வலியிலன்; இப்பெற்றிப்பட்டவன், மேல் வந்த பகைவன் வலியை யாங்ஙனம் தொலைப்பன்?.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு இலன் - தன் சுற்றத்தின்மேல் அன்பில்லாதவனாகவும்; ஆன்ற துணை இலன் - சிறந்த துணையில்லதவனாகவும், தான் துவ்வான்-அவற்றோடுதானும் வலிமையில்லாதவனாகவும் உள்ள ஒருவன்; ஏதிலான் துப்பு என்பரியும்- பகைவன் வலிமையை எங்ஙனந் தொலைப்பான்? இம்மூன்று நிலைமையையும் ஒருங்கே யுடையவன் எளிதாய் வெல்லப்படுவான் என்பதாம், ஆனுதல் நிறைதல் அல்லது போதியதாதல், துத்தல் வலியுறுத்தல். ’துப்பு’ தொழிற்பெயரடிப் பண்புப் பெயர்.
கலைஞர் உரை:
உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?.
சாலமன் பாப்பையா உரை:
மக்களிடத்தில் அன்பு இல்லாத, வலுவான துணையும் இல்லாத, ஆற்றலும் அற்ற அரசின்மீது ஆற்றல் மிக்க பகை வந்தால், அப்பகையின் வலி‌மையை எப்படி அழிக்க முடியும்?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
அன்பில்லாதவன் துணையில்லாதவனாகவும் தானே வெல்லக்கூடிய திறமையற்றவனாகவும் மாறிவிடுவதால் பலமுள்ள பகைவர்களை எப்படி எதிர்த்து நிற்க முடியும்?
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன், தனது சுற்றத்தின்மீது அன்பில்லா மலும், வலிமையான துணையில்லாமலும், தானும் வலிமை யில்லாமலும் இருப்பானாகில் தன்மீது வந்த பகைவன் வலியினை எவ்வாறு தொலைப்பான்?
தமிழ்க்குழவி உரை:
ஒருவன் அன்பு இல்லாதவனாகவும் துணையில்லா தவனாகவும், வலிமையற்ற வனாகவும் இருப்பின் பகைவரை வெற்றி கொள்ள முடியாது.
Translation
No kinsman's love, no strength of friends has he; How can he bear his foeman's enmity?.
Explanation
How can he who is unloving, destitute of powerful aids, and himself without strength overcome the might of his foe ?.
Transliteration
Anpilan Aandra Thunaiyilan Thaandhuvvaan Enpariyum Edhilaan Thuppu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 862