|
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.(துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்- மாறுபாடு என்று சொல்லப்படும் தலையாய துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்- அவ்வில்லாமை அவனுக்குத் தலையாய இன்பத்தை விளைக்கும். 'துன்பத்துள் துன்பம்' எல்லார்க்கும் பொல்லாதவனாய் எங்கும் எப்போதும் துன்புறுதல். 'இன்பத்துள் இன்பம்' எல்லார்க்கும் நல்லவனாய் எங்கும் எப்போதும் இன்புறுதல்
|
|
கலைஞர் உரை:
|
|
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அது மட்டுமன்றித்) துன்பங்களிலெல்லாம், கொடிய துன்பமாகிய மனத்தாபம் என்ற துன்பத்தை நீக்கிவிட்டால் அதுவே இன்பங்களிலெல்லாம் சிறந்த இன்பமாகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மாறுபாடு என்கின்ற துன்பங்களுக்கெல்லாம் துன்பமான ஒன்று இல்லையென்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
துன்பத்துள் துன்பம் தரும் இகல் என்னும் பண்பு ஒருவரிடத்தில் இல்லாது நீங்குமாயின் அவர் வாழ்வில் இன்பத்துள் இன்பம் மிகும்.
|
|
Translation
|
|
Joy of joys abundant grows,
When malice dies that woe of woes.
|
|
Explanation
|
|
If hatred which is the greatest misery is destroyed, it will yield the greatest delight.
|
|
Transliteration
|
|
Inpaththul Inpam Payakkum Ikalennum
Thunpaththul Thunpang Ketin
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|