Thirukural

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்.

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கி விட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும். (தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். இது தோற்றமுண்டா மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின்- மாறுபாடு என்று சொல்லப்படும் துன்பந்தரு நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குவானாயின்; தவல் இல்லாத் தா இல் விளக்கம் தரும்- அது அவனுக்கு அழியாத குற்றமற்ற புகழைத் தரும். உலகுள்ள அளவும் நிலைத்து நிற்றலால் 'தவலில்லா' என்றும், எல்லாராலும் புகழப்படுவதாலும் பெயரை விளங்கச் செய்வதாலும் 'தாவில் விளக்கம்' என்றும், கூறினார்.
கலைஞர் உரை:
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(மனத்தில் குரோதம் உண்டாகிவிட்டால் நீக்குவது கடினந்தான். நீக்கிவிட்டால்) தீர்க்க முடியாத வியாதியைப் போன்ற குரோதத்தை நீக்கிவிட்டால் அது நிச்சயமாகக் குற்றமற்ற புகழுடைய நல்வாழ்வை உண்டாக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
மாறுபாடு என்கின்ற துன்பம் செய்யும் நோயினை ஒருவன் நீக்கி விடுவானாகில், அவனுக்கு அது எப்போதும் இருப்பதற்குக் காரணமான புகழினைக் கொடுக்கும்.
தமிழ்க்குழவி உரை:
மாறுபாடு என்கின்ற மனநோயை நீக்கிவிட்டால், ஒருவருக்குக் குறைவில்லாத புகழ் பெருமையொடு சேரும்.
Translation
If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won.
Explanation
To rid one-self of the distressing dtsease of hatred will bestow (on one) a never-decreasing imperishable fame.
Transliteration
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath Thaavil Vilakkam Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 853