|
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் -உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்; வையத்துஅலகையா வைக்கப்படும் - மகன் என்று கருதப்படான்,வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும். (கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உலகத்தில் அறிவுடையார் பலர் உண்டென்பதாகிய ஒரு பொருளை இல்லையென்று சொல்லுமவன், இவ்வுலகத்தின் கண்ணே திரிவதாகிய பேயென்று எண்ணப்படுவன். இஃது உயர்ந்தோர் உண்டென்பதனை இல்லையென்றல் புல்லறிவென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்- உயர்ந்தோ ரெல்லாரும் உண்டென்று சொல்லும் பொருளை இல்லையென்று மறுக்கும் புல்லறிவாளன் ; வையத்து அலகையா வைக்கப்படும்- மண்ணுலகத்தில் மாந்தன் வடிவில் வாழும் பேயாகக் கருதப்படுவான். உயர்ந்தோர் உண்டென்ப கடவுள், மறுபிறப்பு, இருவினைப் பயன், வீடு , தீயுழி (நரகம்) முதலியன. "ஒன்றறி கிளவி தறட வூர்ந்த குன்றிய லுகரத் திறுதி யாகும்." என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி (சொல். கிளவி, 8) உண்டு என்பது ஒன்றன்பாற் சொல்லாதலால், 'உண்டென்பது' வகுப்பொருமை. "வேறில்லை யுண்டைம் பால்மூ விடத்தன." என்னும் 13-ஆம் நூற்றாட்டை நன்னூல் நூற்பா(339) பிற்காலத்ததாம். தேவிகம் (சாத்துவிகம்), மாந்திகம் (இராசதம்), பேயிகம் (தாமதம்) என்னும் முவகை மாந்தத் தன்மையுள் முதலிரண்டும் இல்லாதவனை 'அலகை' என்றார்.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஒன்றும் அறியாத நல்லவர்களையும் கெடுப்பதற்காகவே, உலகத்தில் அறிவிற் சிறந்தவர்கள் அனுபவித்துச் சொல்லி உலகத்தார் நம்புகிற உண்மைகளை யெல்லாம் புல்லறிவாளன் மறுப்பான். அதனால்) புல்லறிவாளன் அறிவாளிகள் உண்மை யென்று சொன்னதை யெல்லாம் இல்லை யென்று மறுப்பான். அவனை, உலகத்தை மருட்டி வசப்படுத்துகிற ஒரு பிசாசு என்றே சொல்ல வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
உலகில் அறிந்தோர் பலரும் உண்டு என்ப தைப் புல்லறிவாளன் இல்லையென்று சொல்லுவான். அவன் மகன் என்று கருதப்படான். உலகில் சொல்லப் படுவதோர் பேய் என்று கருதப்படுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உலகத்தவர் 'உண்டு' என்று நிறுவிய ஒன்றை. ஆராயாமல் 'இல்லை' என்று மறுப்பவன் 'பேய்' (அலகை) என்றே பேசப்படுவான்.
|
|
Translation
|
|
Who what the world affirms as false proclaim,
O'er all the earth receive a demon's name.
|
|
Explanation
|
|
He who denies the existence of what the world believes in will be regarded as a demon on earth.
|
|
Transliteration
|
|
Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu
Alakaiyaa Vaikkap Patum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|