|
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
காணாதாற் காட்டுவான் தான் காணான் - தன்னை எல்லாம் அறிந்தானாக மதித்தலான் பிறரால் ஒன்றறியும் தன்மையிலாதானை அறிவிக்கப்புகுவான் அவனாற் பழிக்கப்பட்டுத்தான் அறியானாய் முடியும்:காணாதான் தான் கண்டவாறு கண்டானாம் - இனி அவ்வறியுந் தன்மையில்லாதான் கொண்டது விடாமையான் தான் அறிந்தவாற்றால் அதனை அறிந்தானாய் முடியும்; (புல்லறிவாளர்க்கு நல்லறிவு கொள்ளுதல் ஒருவாற்றானும் இயைவதன்று என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அறியாதானை அறிவிக்கப் புகுதுமவன் தானறியான்: அவ்வறியாதவன் தான் அறிந்தபடியை அறிந்தானாயிருக்குமாதலான். இது கொண்டது விடாமை புல்லறி வென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
காணாதாற் காட்டுவான் தான் காணான்- தன்னைப் பேரறிவாளனாகக் கருதுவதால் பிறர் வாயிலாக ஒன்றறியுந் தன்மையில்லாத புல்லறிவாளனுக்கு அறிவு புகட்டப் புகுந்தவன் அவனாற் பழிக்கப்பட்டுத் தான் அறியாதவன் என்னும் நிலைமையையே அடைவன்; காணாதான் தான் கண்டவாறு கண்டான் ஆம்- அவ்வறியுந்தன்மை இல்லாதவனோ, தான் அறிந்தவகையே சரியென்று நம்புவதால் , இறுதியில் தான் முன்பு அறிந்தவாறே அறிந்தவனாக முடியும். புல்லறிவாளனுக்கு நல்லறிவு கொளுத்தும் வகை இல்லையென்றவாறு. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அற்ப புத்திக்காரன் ஒன்றும் அறியாத நல்லவர்களையும் கெடுத்து வைப்பான்.) நல்லறிவுகளைத் தானே அறியாதவனாகிய புல்லறிவாளன் அறியாத ஒருவனுக்கு அறிவு சொல்லுவது எப்படி முடியுமென்றால், ஒன்றும் அறியாத அந்த நிரபராதியும் இந்தப் புல்லறிவாளனைப் போன்ற அற்ப புத்திக்காரனாகவே மாறிவிடுவான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தன்னை எல்லாம் அறிந்தவனாக மதித்த லால் பிறர் அவனுக்கு அறிவிக்கப் புகுந்தால் அவனால் பழிக்கப்படுவதுடன் அப்படிச் சொல்லப் போனவன் ஒன்றும் அறியாதவனாக முடியும். இனி அறியும் தன்மை இல்லாத அவன் தான் அறிந்தபடியே அறிந்தவனாகச் செய்து கொள்ளுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிவில்லாத ஒருவனுக்கு அறிவுரை கூறமுற்படுபவன் தானே அறிவில்லாதவனாக இருக்க, அவ்வறிவில்லாதவன் தான் அறிந்தவற்றையே உண்மையெனக் கருதிக் கொள்வான்.
|
|
Translation
|
|
That man is blind to eyes that will not see who knowledge shows;-
The blind man still in his blind fashion knows.
|
|
Explanation
|
|
One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".
|
|
Transliteration
|
|
Kaanaadhaan Kaattuvaan Thaankaanaan Kaanaadhaan
Kantaanaam Thaankanta Vaaru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|