|
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பேதையார் கேண்மை பெரிது இனிது-பேதை யானவரின் நட்பு மிக இனியதாம்; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்-எங்ஙனமெனின், அவரை விட்டுப் பிரியும்போது ஒரு துன்பமுந் தருவதில்லை. "பேயொடுங் கூடிப் பிரிதலோ வரிதே". "பரீ இ யுயிர்செகுக்கும் பாம்பொடு மின்னு மரீ இப் பின்னைப் பிரிவு." [நாலடி. 220] ஆதலால், பழகினவரை விட்டுப் பிரிதலென்பது பொதுவாகத் துன்பந் தருவதே, ஆயின், பேதையார்நட்பு வரவரத் தேய்ந்துவருதலாலும் யாதொரு நன்மையுஞ் செய்யாமையாலும், அவரை விட்டுப் பிரிதல் எள்ளளவுந் துன்பந் தராததாம். இதனால், அறிவுடையோர் நட்பாயின்அவர் பிரிவின்கண் பெரிதுந் துன்பம் தருமென்பது,எதிர்நிலை யளவையாற் பெறப்படும் . பேதையாரைப் புகழுவதுபோற் பழித்தலால், இது வஞ்சப் புகழ்ச்சி யென்னும் அணியாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அந்த வெறி பிடித்த செயல்கள் சிற்சில சமயங்களில் வெகு இனிமையானவையாகவும் இருக்கும். ஆனாலும்) முட்டாள்களின் உறவினால் மிகுந்த இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற சமயங்களிலும் அவர்களை விட்டுப் பிரிவது துன்பம் தரக்கூடியதாக இருக்காது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
பிரிந்து போகின்ற காலம் வரும்போது துன்பம் தருவது ஒன்றும் இல்லையாதலால் பேதையானவர் களுடன் நட்புக் கொள்ளுதல் மிகவும் இனிமையான தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அறிவிலிகளின் நட்பு, பிரியும்பொழுது எந்த துன்பத்தையும் நல்காததால் அதனை நன்றென்றே கருதல் வேண்டும்.
|
|
Translation
|
|
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no sting.
|
|
Explanation
|
|
The friendship between fools is exceedingly delightful (to each other): for at parting there will be nothing to cause them pain.
|
|
Transliteration
|
|
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|