Thirukural

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டுஅகநட்பு ஒரீஇ விடல்.

பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் - தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க. (அக்காலமாவது, தம்மானும் பகையென்று வெளிப்பட நீக்கலாகாத அளவு. இதனானே, ஆமளவெல்லாம் நீக்குக என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் அந்நட்பினை ஒழுகுமாறு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பகைவர் நட்பாங்காலம் வந்தவிடத்து, முகத்தால் நட்பினைச் செய்து அகநட்பு நீங்கவிடுக.
தேவநேயப் பாவாணர் உரை:
பகை நட்பு ஆம் காலம் வருங்கால்- தம் பகைவர் தமக்கு நண்பரா யொழுகுங் காலம் வரின்; முகம் நட்டு அகம் நட்பு ஒரீஇ விடல் - தாமும் அவர்போல் முகத்தால் நட்புச் செய்து அகத்தில் அதைவிட்டு நீங்கிப் பின்பு வேண்டாதபோது புறநட்பையும் விட்டு விடுக. பகை நட்பாங் காலமாவது பகைவரை வெளிப்படையாக நீக்கமுடியாத காலம். இதனால், வேண்டும்போது பகைவரோடும் புறத்தளவில் தொடர்பு கொள்க என்பது கூறப்பட்டது. 'ஒரீஇ' இன்னிசையளபெடை.
கலைஞர் உரை:
பகைவருடன் பழகிடும் காலம் வருமேயானால் அகத்தளவில் இல்லாமல் முகத்தளவில் மட்டும் நட்புச் செய்து பின்னர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
நம் பகைவர் நம்முடன் நண்பராக வாழும் காலம் வந்தால் நாமும் அவருடன் முகத்தால் நட்புக் கொண்டு மனத்தால் அந்நட்பை விட்டுவிட வேண்டும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
பகைவன் நட்புக் கொண்டாட வருகிற சமயங்களில் முகத்தளவில் மட்டும் நட்புக் கொண்டாடி, மன நட்பாக நம்பிவிடுவதை நீக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
பகைவர்கள் தம்மிடம் நண்பராக நடந்து கொள்ளுகின்ற காலம் வந்தபோது அவர்களுடன் முகத் தினால் மட்டும் நட்பினைச் செய்து மனத்தினால் அவர்கள் நட்பினைத் தவிர்த்தல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
பகைவர்கள், நட்பு பூண்டு பழக முன்வருவாரேல், முகத்தளவிலே நட்பு கொண்டு அகத்தளவில் அதனைத் தவிர்த்திடல் வேண்டும்
Translation
When time shall come that foes as friends appear, Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
Explanation
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).
Transliteration
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu Akanatpu Oreei Vital

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 830