|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
|
|
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் பொருட்டே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு. (எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - கணவனும் மனைவிபும் தம் இல்லத்தின்கண் இருந்து தம்மையும் தம் மக்களையும் தம் பொருள்களையும் பேணிக்காத்து வாழ்வதெல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற்பொருட்டு - விருந்தினரைப் பேணி அவருக்குப் பலவகையிலும் நன்றி (உபகாரம்) செய்தற் பொருட்டே.
இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார். ' விருந்து ' பண்பாகு பெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
வீடுவாசலோடு இருந்து கொண்டு பொருள்களைப் பாதுகாத்து மனைவி மக்களுடன் குடும்பம் நடத்துவதன் நோக்க மெல்லாம் வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக இருப்பதற்காகத்தான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
இவ்வாழ்கையில் வாழ்ந்து பொருளினைக் காத்து வாழ்வதெல்லாம் விருந்தினரைப் போற்று உதவி செய்தற் பொருட்டேயாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
இல்லறத்திருந்து இல்வாழ்வதெல்லாம், வரும் விருந்தினர் பேணி நல்லறம் செய்வதற்காகவே என்று அமைதல் வேண்டும்.
|
|
Translation
|
|
All household cares and course of daily life have this in view.
Guests to receive with courtesy, and kindly acts to do.
|
|
Explanation
|
|
The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.
|
|
Transliteration
|
|
Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi
Velaanmai Seydhar Poruttu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|