|
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா. (இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
உடம்பிற்கு அகத்துறுப்பாகிய அன்பிலார்க்குப் புறத்துறுப்புகளெல்லாம் யாதினைச் செய்யும்?.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறுவது; அஃது இல்லார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்புகள் உயிரில்லாது எலும்பைத் தோலாற் போர்த்த போர்ப்புக்களே.
அன்பின் வழியது என்பது அன்பு செய்தற்கென்றே ஏற்பட்டது. இதன் விளக்கமே,
அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு.
என்னுங் குறள். உயிர்நிலை என்பது கதவுநிலை என்பது போன்ற கூட்டுச் சொல். என்புதோற் போர்ப்பு என்றது பிணத்தினும் இழிந்த தென்னுங் குறிப்பினது.
|
|
கலைஞர் உரை:
|
|
அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
அன்பை அடிப்படையாகக் கொண்டதே உயிர் நிறைந்த இந்த உடம்பு, அன்பு மட்டும் இல்லை என்றால் இந்த உடம்பு வெறும் எலும்பின்மேல் தோலைப் போர்த்தியது போன்றது ஆகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால் அன்பிருக்கிற உடல்தான் உயிருள்ள உடல்). அன்பு வழியில் நடந்து கொள்ளுகிறவர்களுடைய உடல் தான் உயிருள்ளது; அன்பில்லாத உடல் வெறுந்தோலால் மூடப்பட்ட எலும்புகள் தாம்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அன்பினைக் கொண்டு அதன் வழியில் நிற்பதே உயிர் இருக்கும் உடம்பாகும். மற்ற அன்பில்லாத உடம்புகள் எலும்பினைத் தோலினாலே போர்த்திக் கொண்டிருப்பனவாகும். உயிர் நின்றன ஆகா.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
உயிர்நிலை என்பது அன்பின் வழியதே. அவ்வன்பிலா வாழ்க்கை என்பது எலும்பைத் தோல் போர்த்திய வெற்றுடம்பின் இயக்கமே.
|
|
Translation
|
|
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.
|
|
Explanation
|
|
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.
|
|
Transliteration
|
|
Anpin Vazhiyadhu Uyirnilai Aqdhilaarkku
Enpudhol Porththa Utampu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|