|
உரிமை வாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவுநேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவு கொண்டு நின்றவரின் தொடர்பைக் கைவிட மாட்டார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன் கண்ணே நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு தொலைவிடத்தும் துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார். (பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு - பொருட்கேடும் போர்க்கேடும்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒழுக்கத்தின்கண்ணே நின்றார் பழைமையின்கண்ணே நின்றாரது நட்பை அவராலே தமக்கு அழிவு வந்தவிடத்தும் விடார். எல்லை- வரம்பு
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எல்லைக்கண் நின்றார்-நட்புவரம்பு கடவாது. அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு-பழைமையைத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை; தொலைவிடத்தும் துறவார்-அவரால் தமக்குக் கேடுவந்தவிடத்தும் விடார். 'தொல்லை' ஆகுபொருளி, 'தொலைவு' பொருட்கேடும் போர்த்தோல்வியும்.
|
|
கலைஞர் உரை:
|
|
நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நட்பின் எல்லையைக் கடக்காமல் வரம்பிற்குள்ளேயே நின்றவர், தம்முடன் நெடுங்காலமாக நட்புக் கொண்டவரால் கெடுதிகள் என்றாலும் அவரது நட்பினை விடமாட்டார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) பழைய நட்பு என்ற நியாயத்தின் வரம்புக்கு உட்பட்டவர்கள் பழைய நண்பர்களால் தமக்கு நஷ்டம் வந்துவிட்டாலும் அவர்களை விட்டுவிட மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நட்பு ஆகிய வரம்பினைத் தாண்டாமல் அதன் கண்ணே நின்றவர்கள், தம்முடன் பழைமையான தன்மையில் மாறாமல் வந்தவரது நட்பினை அவரால் கெடுதிவந்த போதும் விடமாட்டார்கள்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
தொலைவில் இருந்து துன்பப்படுங்காலும் துணை நின்றார் தம் இனிய நட்பினை, நட்பின் ஆழத்தை உணர்ந்தவர்கள் என்றும் மறப்பதில்லை.
|
|
Translation
|
|
Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.
|
|
Explanation
|
|
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
|
|
Transliteration
|
|
Ellaikkan Nindraar Thuravaar Tholaivitaththum
Thollaikkan Nindraar Thotarpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|