Thirukural

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்.

ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
ஆய்ந்து ஆய்ந்து கேண்மை கொள்ளாதான் - குணமும் செய்கையும் நல்லன் என்பது பலகாலும் பலவாற்றானும் ஆராய்ந்து, ஒருவனோடு நட்புக்கொள்ளாதவன்; கடைமுறை தான்சாம் துயரம் தரும் - முடிவில் தான் சாதற்கு ஏதுவாகிய துன்பத்தினைத் தன் மாற்றார் விளைக்க வேண்டாமல் தானே விளைக்கும். ('கடைமுறைக்கண்' என இறுதிக்கண் தொக்க ஏழாவது விரிக்க. குணமும் செய்தலும் தீயானொடு கொள்ளின், அவற்கு வரும் பகைமையெல்லாம் தன் மேலவாய்ப் பின் அவற்றான் இறந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் ஆராயவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
குற்றமும் ஆய்ந்து குணமும் ஆய்ந்து கொள்ளாதான் கொண்ட நட்பு, பிற்காலத்துத் தான் சாதற்கு ஏதுவான துன்பத்தைத் தரும். இஃது ஆராயாமையால் வருங்குற்றங் கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை-ஒருவனுடைய குணங்களையும் செயல்களையும் நல்லனவாவென்று பலமுறையும் பலவகையாலும் ஆராய்ந்து பாராது அவரொடு செய்துகொள்ளும் நட்பு; கடைமுறை-இறுதியில்; தான் சாம் துயரம் தரும்-தான் சாதற்கேதுவான துன்பத்தை யுண்டாக்கும். தீயவனோடு நட்புக்கொள்ளின், அவன் பட்ட கடனெல்லாம் தன் தலைமேற் சுமருதலானும், அவன் செய்த குற்றங்கட்குரிய தண்டனைகளைத் தானும் அடைதலானும், அவன் பகையெல்லாந் தன்னையுந் தாக்குதலானும், இறுதியிற் சாதல் அல்லது சாதற்கேற்ற நோதல்தான் விளையும் என்பதாம். 'ஆய்ந்தாய்ந்து' என்னும் அடுக்குப் பன்மை அல்லது தொடர்ச்சி பற்றியது
கலைஞர் உரை:
திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு, கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது குணத்தையும் குற்றத்தையும் நன்கு எண்ணி நட்புக் கொள்ளாதவனுக்கு, அந்த நட்பு இறுதியில் அவன் சாவதற்கு ஏற்ற துன்பத்தைத் தரும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(ஆகையினால்) பலமுறை ஆராய்ந்து நண்பரைத் தேர்ந்தெடுக்காமல் செய்துகொள்ளும் தீய நட்பு ஒருவனுக்கு அவன் சாகிறவரைக்கும் துன்பம் தந்து கொண்டிருக்கும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
] குணம் செய்கை முதலியவற்றைப் பலகாலும் யலவாற்றாலும் ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவன் முடிவில் தான் சாதற்குக் காரணமான துன்பத்தினைத் தானே உண்டாக்கிக் கொள்ளுவான்.
தமிழ்க்குழவி உரை:
மீண்டும் மீண்டும் ஆய்ந்து பார்த்து உருவாக்கிக் கொள்ளாத நட்பு, இறுதியில் உயிர்துறத்தலுக்கே ஏதுவான துன்பம் தரும்.
Translation
Alliance with the man you have not proved and proved again, In length of days will give you mortal pain.
Explanation
The friendship contracted by him who has not made repeated inquiry will in the end grieve (him) to death.
Transliteration
Aaindhaaindhu Kollaadhaan Kenmai Kataimurai Thaansaam Thuyaram Tharum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 792