|
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ் செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும் - நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும். (நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
படிக்குந்தோறும் நூல்நயம்போல அறிவுதரும், பழகுந்தோறும் பண்புடையாளரது நட்பு. இது குணவானோடு நட்புக்கொள்ளின் அறிவுண்டாமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பண்பு உடையாளர் தொடர்பு-பண்பட்ட மேலோர் தம்முட் செய்யும் நட்பு; பயில்தொறும்-பழகப்பழக; நூல் நவில்தொறும் நயம் போலும்-சிறந்த நூல் கற்கக்கற்கக் கற்றார்க்கு இன்பந்தருவதுபோல் இன்பஞ் செய்வதாம். நயத்தல் விரும்புதல் அல்லது மகிழ்தல், நயக்கப்படுவது நயமெனப்பட்டது. மேன்மேல் வளரும் நட்பின் தன்மை இங்குக் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மேலும்) அறிவு நிறைந்த நயமான ஒரு நூலைப் படிக்கப் படிக்க அதன் சிறப்பு அதிகமாகப் புலப்படுவது போல, நல்ல குணமுள்ளவர்களுடைய நட்புப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
நற்குணமுடைய மக்கள் தமக்குள் செய்த நட்பு பழுகுந்தோறும் அவர்க்கு இன்பம் செய்வதாவது நூற்பொருள்களைக் கற்குந்தோறும் இந்நூலானது கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
படிக்கப் படிக்க இன்பம் தருகின்ற நல்ல நூல்களைப் போல பண்புடையாளர்களின் நட்பு பழக பழக இனிமை தரும்.
|
|
Translation
|
|
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.
|
|
Explanation
|
|
Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
|
|
Transliteration
|
|
Navildhorum Noolnayam Polum Payildhorum
Panputai Yaalar Thotarpu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|