Thirukural

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்கும்தன் நாளை எடுத்து.

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
தன் நாளை எடுத்து - கடந்துபோன தன் வாழ்நாட்களையெல்லாம் எடுத்தெண்ணி; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள், போரிற் சிறந்த புண்படாத நாட்களையெல்லாம் வீணாகக் கழித்த நாட்களோடு சேர்ப்பான் தூய பொருநன். விழுப்புண் மார்பிலும் முகத்திலும் பட்ட பெரும் புண். முதுகிற்பட்டது பழிப்புண். பொருநாளாயினும் விழுப்புண் பெறாநாள் வெறுநாளாகக் கருதுவான் என்பதாம். பொருநன் போர்மறவன். விழுப்புண் பெறாநாள் வீணாளாகவே, பெற்றநாள் மாணாள் என்பதாம்.
கலைஞர் உரை:
ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
படைச் செருக்குடைய வீரன்தான் போர் புரிந்த நாட்களை எண்ணிப் பார்த்து, அவற்றுள் குற்றமற்ற புண்களாகிய முகப் புண், மார்புப் புண் என்பனவல்லாது வேறு இடங்களில் புண்பட்ட நாட்கள் இருக்குமானால், அந்த நாட்களைத் தனக்கு மாசுண்டாக்கிய நாட்களாக மதிப்பிடுவான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
தனக்குச் சென்ற நாட்களை எடுத்து எண்ணி அவற்றுள் போரில் சென்று சிறப்பான புண்கள் படாத. நாட்களையெல்லாம் பயன்படாமல் கழிந்த நாட்களுக் குள்ளே வீரன் வைப்பான்.
தமிழ்க்குழவி உரை:
சிறந்த போர்வீரன், தன் மார்பில் விழுப்புண் படாது கழியும் நாட்களையெல்லாம் வீணான நாட்களாகே கருதுவான்.
Translation
The heroes, counting up their days, set down as vain Each day when they no glorious wound sustain.
Explanation
The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.
Transliteration
Vizhuppun Pataadhanaal Ellaam Vazhukkinul Vaikkumdhan Naalai Etuththu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 776