Thirukural

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம் என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார். துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள் 1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அன்பானது அறஞ்செய்வார்க்கே சார்பாமென்பர் அறியாதார். அவ்வன்பு மறஞ் செய்வார்க்குந் துணையாம்.
தேவநேயப் பாவாணர் உரை:
அன்பு அறத்திற்கே சார்பு என்ப - அன்பு அறத்திற்கே துணையாவது என்று சிலர் சொல்வர்; அறியார் - அவர் அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - அதன் மறுதலையான மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. அறம் மறம் என்பன இங்கு நல் வினை தீவினை என்று பொருள்படும் எதிர்ச் சொற்கள். அன்பு மறத்திற்குத் துணை என்பது, இஞ்சி பித்தத்திற்கு நல்லது என்பது போல்வது. "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்". (158) "இன்னாசெய் தாரை யொறுத்த லவர்நாண நன்னயஞ் செய்து விடல்". (314) என்னுங் குறள்கள் இங்குக் கவனிக்கத்தக்கன. ஒரு பகைவனுக்கு நன்மை செய்தவிடத்து அவன் நாணித் தன் பகைமையைவிட்டு நட்பாவது இயல்பாதலின், "மறத்திற்கு மஃதே துணை" என்றார். ஒருவன் தன் மனைவி மக்கள் மேலுள்ள அன்பினால், அவரைக் காத்தற்குத் தீயவழிகளிலும் பொருள் தேடுதல் உலகத்து நிகழ்தலால், அதனையே மறத்திற்கு மஃதே துணை என்று குறித்தார் என்று உரை கூறுவாருமுளர். அகப்பற்றால் தீமை செய்வது போன்றதே புறப்பற்றால் தீமை செய்வது மாதலானும், தீமைக்குத் துணைசெய்வது அறத்தோடு பொருந்தாமையாலும், அது உரையன்மை அறிக.
கலைஞர் உரை:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(பிரியத்துக்காகத் தீய காரியங்களைச் செய்வது அன் பாகாது.) தர்மமான நல்ல காரியத்தைச் செய்துவது தான் அன்போடு சேர்ந்தது.ஒருவர் மேலுள்ள பிரியத்துக்காக இன்னொருவருக்குத் தீமையான காரியங்களைச் செய்வதையும் அன்பென்று சொல்லுகிறவர்கள் அறியாதவர்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறியாமையில் உள்ளவர்கள் அறத்திற்குத்தான் அன்பு துணையென்று கூறுவர். மறத்தினை (தீ நெறியினை) நீக்குதற்கும் அந்த அன்பே துணையாகும்.
தமிழ்க்குழவி உரை:
அறச் செயல்களுக்கு மட்டும் தான் அன்பு காரணம் என்று அறியாரே கூறுவர். மறமானம் பூண்ட வீரதீரச் செயல்களுக்கும் அன்பே தான் காரணம்.
Translation
The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain.
Explanation
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
Transliteration
Araththirke Anpusaar Penpa Ariyaar Maraththirkum Aqdhe Thunai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 76