Thirukural

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு.

உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய் இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண் நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச் சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு' ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும் சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி இல்லை என்பதாம்.)
மணக்குடவர் உரை:
முற்பிறப்பின்கண் பிறர்மேலன்பு வைத்துச் சென்ற செலவென்று சொல்லுவர்: இப்பிறப்பின்கண் உலகத்தில் இன்பமுற்றார் அதன் மேலுஞ் சிறப்பெய்துதலை.
தேவநேயப் பாவாணர் உரை:
வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் நுகர்ந்தவர் மறுமையில் தேவருருலகஞ் சென்று அடையும் சிறந்த இன்பத்தை; அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அவர் முன்பு இங்கு அன்பொடு பொருந்த வாழ்ந்த நெறியின் பயன் என்று சொல்வர் அறிந்தோர். ' வழக்கு ' என்பது ஆகுபொருளது. இல்லறத்தினாலேயே இம்மையில் இவ்வுலக இன்பமும் மறுமையில் விண்ணுலக வின்பமும் பெறுவதற்குக் கரணியமாயிருப்பது அன்பு ஒன்றே என்பது இங்குக் கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.
சாலமன் பாப்பையா உரை:
இவ்வுலகில் வாழ்ந்து இன்பம் அடைந்தவர் பெறும் சிறப்பே அன்பு கொண்டு இல்வாழ்க்கை நடத்தியதன் பயன்தான் என்று அறிந்தோர் கூறுவர்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அன்புடையவர்கள் தாம் சிறப்படைய முடியும்.) உலகத்தை இன்பமாக அநுபவித்துப் புகழ் பெற்றவர்களுடைய சிறப்பெல்லாம் அவர்கள் அன்பைக் கடைப்பிடித்து நடந்து கொண்ட காரணத்தினால்தான்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இவ்வுலகில் இல்லறத்தில் இன்பமடைந்து பெறுகின்ற பெருமையினை, அன்பினைப் பெற்றவராகிப் பொருந்திய வழியினாலான பயனேயாகும் என்று அறிந்தோர் கூறுவார்கள்.
தமிழ்க்குழவி உரை:
இவ்வுலகத்தில் மகிழ்வுற்று வாழ்பவர் பெறும் சிறப்பானது அன்பின்பயனாகவே விளைந்த நலம் என்று ஆன்றோர் கூறுவர்.
Translation
Sweetness on earth and rarest bliss above, These are the fruits of tranquil life of love.
Explanation
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
Transliteration
Anputru Amarndha Vazhakkenpa Vaiyakaththu Inputraar Eydhum Sirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 75