|
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அவை அஞ்சா மாற்றம் கொடுத்தல் பொருட்டு-வேற்றரசர் அவையிடத்து அவர் வினாவியதற்கு விடையும் சொன்னதற்கு மறுமொழியும் அஞ்சாது சொல்லுதற் பொருட்டு; ஆற்றின் அளவு அறிந்து கற்க-முறைப்படி அளவை நூலைத் தெளியக் கற்க. அமைச்சர்க்குத் தம் அரசரின் அவையிடத்துப் பொதுவாகவும் இயல்பாகவும் அச்சமிராதாகையாலும், பெரும்பாலும் தம் சூழ்வினைகளை அரசரோடேயே நிகழ்த்துவராதலாலும், இங்கு வேற்றரசர் அவையெனக் கூறப்பட்டது. முறைப்படி கற்றலாவது இலக்கணநூல் கற்ற பின்னரே அளவை நூலைக் கற்றல். அளவென்றது நான்கு முதற் பத்து வகையாகச் சொல்லப்பெறும் அளவை வகைகளை. அவை முன்னரே கூறப்பட்டன. காட்சியுங் கருத்துமாகிய இருவகைப் பொருள்களின் இயல்பையும் அளந்தறிதற்குக் கருவியாகவுள்ள நெறிமுறைகளை, அளவையென்றது தொழிலாகுபெயர். அளவைநூல் தருக்கநூலென்றும் ஏரணநூலென்றும் பெயர்பெறும். அது சிறப்பு (வைசேடிகம்) முறை (நியாயம்) என இரு திறப்படும். இவையிரண்டும், முறையே கணாத முனிவராலும் அக்கபாதரென்னும் கோதம முனிவராலும் இயற்றப்பட்ட ஆரிய முதனூல்களாக இன்று சொல்லப்படினும், இவற்றுள் முன்னது தமிழர் கண்டதென்றும், அது ஏரணம் என்றே பெயர் பெறுமென்றும், பின்னதே அதன் வழிப்பட்ட ஆரியநூலென்றும், அறிதல் வேண்டும். சிறப்பென்னும் வைசேடிகத்திற்குத் தமிழ் ஏரணமே முதனூலென்பதை, அகத்தியத் தருக்க நுற்பாக்களை நோக்கிக் காண்க. அறிந்துகற்றலாவது, நேர்நெறிப்பட்ட தருக்க உறழ்களோடு. (வாதங்களோடு), கோணைநெறிப்பட்ட விசியுழி(செற்பம்), ஒட்டாரம்(விதண்டை), திரிப்பு (சலம்) முதலிய உறழ்களையும் ஆய்ந்தறிதல். இவ்விருகுறளாலும் அவையஞ்சாதார் செய்யவேண்டிய செயல் கூறப்பட்டது
|
|
கலைஞர் உரை:
|
|
அவையில் பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு, சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை விரும்பிக் கற்றுக் கொள்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
கற்றறிந்தார் சபையில் விவாதிக்கும்போது, சபைக்கு அஞ்சாமல், தம்முடன் விவாதிக்கிறவருக்கு எதிர்மொழி சொல்லுவதற்காகச் சொல்லவேண்டியதை மட்டும் ஒழுங்கு முறைக்கு ஒத்த அளவோடு கண்டித்துப் பேச வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அவையில் அஞ்சாமல் பிறர் சொல்லுவதற்குப் பதிலாகச் சொல்லும் பொருட்டு, சொல் இலக்கண நெறி யால் அளவை நூற்களைக் கற்றல் வேண்டும் என்பதாம்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அவையின் கண் அஞ்சாமல் தன் கருத்துக்களை முன் எடுத்து வைக்கும் வகையில் தேவையான நூல்களை சுற்றுத் தெரிதல் வேண்டும்.
|
|
Translation
|
|
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.
|
|
Explanation
|
|
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).
|
|
Transliteration
|
|
Aatrin Alavarindhu Karka Avaiyanjaa
Maatrang Kotuththar Poruttu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|