|
ஒருவன் மனதில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
குறித்தது கூறாமைக் கொள்வாரொடு - ஒருவன் மனத்துக் கருதிய அதனை அவன் கூறவேண்டாமல் அறியவல்லாரோடு; ஏனை உறுப்பு ஓரனையர் -மற்றை மாட்டாதார் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும்; வேறு - அறிவான் வேறு. ('கொள்ளாதார்' என்பதூஉம், 'அறிவான்' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. சிறந்த அறிவின்மையின், விலங்கு என்னும் கருத்தான் 'வேறு' என்றார்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
நினைந்ததனைச் சொல்லாமைக் கொள்ளவல்லாரோடு மற்றையர் உறுப்பால் ஒருதன்மையர் அல்லது அறிவினான் வேற்றுமை யுடையார். இது குறிப்பறியாதார் அறிவில்லாதார் என்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
குறித்தது கூறாமைக் கொள்வாரோடு- ஒருவர் தம் மனத்திற் கருதியதை அவர் கூறாமலே அறியவல்லவரோடு; ஏனை உறுப்பு ஓர் அனையர்-மற்றவர் உறுப்பான் ஒரு தன்மையராக ஒப்பாரேனும்; வேறு-மதித்திறனாலும் அறிவாலும் வேறுபட்டவராவர். எனினும் (ஏனும்) என்பது அவாய் நிலையால் வந்தது. ஆறாம் அறிவில்லாத,மாக்கள் நிலையினர் என்னும் கருத்தால் 'வேறு' என்றார். 'ஆல்' அசைநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஒருவன் மனத்துள் நினைப்பதை அவன் சொல்லாமலேயே அறியம் ஆற்றல் உடையவரோடு அந்த ஆற்றல் இல்லாதவர் உறுப்பால் ஒத்தவர்; அறிவால் வேறுபட்டவர் ஆவார்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனெனில்) வாயாற் சொல்லாமலேயே குறிப்பறிந்து காரியம் செய்யக்கூடியவர்களுக்கு மற்ற காரியஸ்தர்கள் சமானமாவார்களா? ஆகமாட்டார்கள். முற்றிலும் வேறுபட்டவர்களே.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
ஒருவன் மனதில் கருதியதனை அவன் கூறாமலேயே அறிய வல்லவரோடு, மற்றவர்கள் உறுப்பால் ஒரு தன்மையராக ஒப்பாராயினும் அறிவால் வேறுபடுவர்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் மனதில் உள்ளவற்றை அவர் கூறும் முன்பே அறிந்து கொள்பவர் தோற்றத்தால் மற்றவர்கள் போல் இருப்பினும் அறிவால் மேம்பட்டவர்.
|
|
Translation
|
|
Who reads what's shown by signs, though words unspoken be,
In form may seem as other men, in function nobler far is he.
|
|
Explanation
|
|
Those who understand one's thoughts without being informed (thereof) and those who do not, may (indeed) resemble one another bodily; still are they different (mentally).
|
|
Transliteration
|
|
Kuriththadhu Kooraamaik Kolvaaro Tenai
Uruppo Ranaiyaraal Veru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|