|
யாம் அரசர்க்கு பழைமையானவராய் உள்ளோம் எனக்கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத்தரும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை - அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித் தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை; கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும். (அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை நோக்கிக் கண்ணோடாது உயிரை வௌவுதலான், அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும், பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாம் பழைமையுடையோ மென்று கருதி இயல்பல்லாதனவற்றைச் செய்யும் நட்பின்தகைமை தமக்குக் கேட்டைத்தரும் இது பின் பகையானவற்றைத் தவிரல் வேண்டும்மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பழையம் எனக் கருதிப் பண்பு அல்ல செய்யும் கெழுதகைமை-அரசனொடு இளமையிலிருந்தே யாம் பழகினேம் என்று கருதித் தமக்குத் தகாதவற்றைச் செய்யும் தவறான நட்புரிமை; கேடுதரும்-அமைச்சர் முதலியோர்க்கு அழிவைத்தரும். பழைமையாவது விளையாட்டுத் தோழமையும் கல்வித் தோழமையும். அரசப் பதவியேற்ற பின்பும் பழைய தோழமைபற்றிச் சமநிலை கொண்டாடிக் குற்றஞ் செய்யின், அரசர்பொறாது தண்டிப்பராதலின், 'கெழுதகைமை கேடுதரும்' என்றார். இம்முக்குறளாலும், இளமையும் நெருங்கிய தொடர்பும் பற்றி அரசர் வெறுப்பன செய்யற்க என்பது கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளருடன் நமக்கு நீண்ட நாள் பழக்கம் உண்டு என்று எண்ணித் தீய செயல்களைச் செய்யும் மனஉரிமை ஒருவருக்குக் கெடுதியையே தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நெடுநாள் பழகியிருந்தாலும்) 'அரசனுக்கு நாம் நெடு நாளைய நண்பர்தாமே' என்று எண்ணிக்கொண்டு முறை தவறி நடந்து கொள்ளும் உரிமை கெடுதி உண்டாக்கும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அரசனுக்கு யாம் பழையவர்கள் என்று கருதித் தமக்கு இயல்பல்லாதவற்றைச் செய்யும் உரிமை அமைச்சர்க்குக் கேட்டினைப் பயப்ப தாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
நீண்ட நாட்களாகப் பழகியவர் என்றெண்ணி பண்பில்லாச் செயல்களைச் செய்யும் உரிமை உணர்வு ஒருவருக்குக் கேட்டினைத் தரும்.
|
|
Translation
|
|
Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.
|
|
Explanation
|
|
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.
|
|
Transliteration
|
|
Pazhaiyam Enakkarudhip Panpalla Seyyum
Kezhudhakaimai Ketu Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|