|
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மறை-அரசனுக்குப் பிறரோடு ஒரு மறைபொருள் பற்றிப் பேச்சு நிகழும்போது; எப்பொருளும் ஓரார்-அதில் எந்தப்பொருளையும் செவிசாய்த்து உற்றுக் கேளாமலும்; தொடரார்-அவனை அணுகி வினவாமலும் இருந்து; மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க-பின் அம்மறை பொருளை அடக்கிவையாது அவனே வலியச் சொன்னால் அமைச்சர் முதலியோர் கேட்டறிக. தம்மைப் பற்றியதாயினும் என்பார் 'எப்பொருளும்' என்றார். 'ஓரார்.' 'தொடரார்' என்பன எதிர்மறை முற்றெச்சம். 'மற்று' பின்மைப் பொருளில் வந்தது; வினைமாற்றின்கண் வந்ததன்று.
|
|
கலைஞர் உரை:
|
|
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(அரசனுடன் பேசும்போது) சொல்லுகிற நியாயங்களில் எதையேனும் அரசன் சரியாகப் புரிந்துகொள்ளாமலோ அல்லது கவனமாகத் தொடர்ந்து கேட்காமலோ இருந்துவிட்டால், அதைப் பற்றிச் சபையில் கேட்டுவிடாமல் பின் மறைவிடத்தில் தனித்துக் கேட்க வேண்டும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
அரசன் பிறரிடம் மறைவாகப் பேசும்போது எதையும் செவி கொடுத்துக் கேளாமல், அரசனிடம் சென்று வினவாமல் இருந்து கொண்டு அரசனே அம்மறை வான செய்திகளைத்தானே சொன்னால் கேட்க வேண்டும்
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மறைவானச் செய்திகளை உற்றுக் கேட்டலோ அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டலோ தவிர்த்து அரசன் கூறும் போது தெரிந்து கொள்வதே நன்று.
|
|
Translation
|
|
Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!.
|
|
Explanation
|
|
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).
|
|
Transliteration
|
|
Epporulum Oraar Thotaraarmar Rapporulai
Vittakkaal Ketka Marai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|