Thirukural

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்திண்ணியர் ஆகப் பெறின்.

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
எண்ணிய எண்ணியாங்கு எய்துப - தாம் எய்த எண்ணிய பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் - எண்ணியவர் அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின்.('எளிதின் எய்துப' என்பார், 'எண்ணியாங்கு எய்துப'என்றார். அவர் அவ்வாறல்லது எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான் அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே பெறுவர்: அவ்வாறு எண்ணினவர் அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண் திண்மை வேண்டு மென்றது..
தேவநேயப் பாவாணர் உரை:
எண்ணியார் திண்ணியார் ஆகப் பெறின்-பொருள்களைப் பெற எண்ணியவர் அவற்றைப் பெறுவதற்கு வழியாகிய வினையில் திண்மையுள்ளவராக இருப்பாராயின்; எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப-தாம் பெற எண்ணிய பொருள்களையெல்லாம் தாம் எண்ணியவாறே பெறுவர். கருதிய பொருள்களை யெல்லாம் எளிதிற் பெறுவ ரென்பார் 'எண்ணிய எண்ணியாங் கெய்துப' என்றார். அமைச்சரின் சூழ்வினை போன்ற செய்வினையும் திண்ணியதாயிருப்பின், அவர் கருதிய பொருள் பெறுதல் எளிதென்பதாம். மந்திரம் மன்னும் திறம். மன்னுதல் எண்ணுதல். முன்(னு)-மன்(னு).
கலைஞர் உரை:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அப்படிப்பட்ட தூய வினைத்திட்பமுடையவர்கள் நினைத்ததை நினைத்தபடி முடிக்கக்கூடியர்கள்.) உண்மையான மனோதிடம் உடையவர்கள் எண்ணின காரியத்தை எண்ணியபடி முடிப்பார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒன்றை நினைத்தவர்கள் அவற்றிற்குக் காரணமான தொழிலின் கண் திண்மையுடையவராக இருந்தால், தாம் அடைவதற்கு நினைத்த எல்லாவற்றை யும் நினைத்தபடியே அடைய முடியும்.
தமிழ்க்குழவி உரை:
ஒரு செயலைச் செய்ய எண்ணியவர் தம் எண்ணத்தில் உறுதியுடையவராக இருப்பின் எண்ணிய வாறே காரியங்கள் கைகூடும்.
Translation
Whate'er men think, ev'n as they think, may men obtain, If those who think can steadfastness of will retain.
Explanation
If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.
Transliteration
Enniya Enniyaangu Eydhu Enniyaar Thinniyar Aakap Perin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 666