Thirukural

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்.

அசைவற்ற ‌தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்க்காகவும்) இழிவானச் செயல்களைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம் அற்ற தெளிவினை உடையார். (சிறிதுபோழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான் , 'செய்யார்' என்றார்.)
மணக்குடவர் உரை:
துன்பம் வரினும் இழிவாகிய வினைகளைச் செய்யார் துளக்க மற்ற தெளிவுடையார். இது பிறரால் இகழப்படுவன செய்யற்க வென்றது. இதனையும் கடிய வேண்டு மென்பது கூறப்பட்டது.
தேவநேயப் பாவாணர் உரை:
நடுக்கு அற்ற காட்சியவர் - அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத்துன்பந் தீர்தற் பொருட்டுத் தமக்கு இழிவு தரும் வினைகளைச் செய்யமாட்டார். இன்பமுந்துன்பமுங் கலந்ததே இவ்வுலகவாழ் வென்றும், வருவது வந்தே தீருமென்றும், இழிவினைகளைச் செய்வதால் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமுமே உண்டாகு மென்றும், அறவழியாற் போக்க முடியாத துன்பத்தை அமைதியாக நுகர்ந்தேயாக வேண்டு மென்றும், தெள்ளத்தெளிவாக அறிந்தவராதலின் 'நடுக்கற்ற காட்சியவர்' என்றும், 'இளிவந்த செய்யார்' என்றும் கூறினார்.
கலைஞர் உரை:
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
தடுமாற்றம் இல்லாது தெளிந்த அறிவினை உடையவர் தாம் துன்பப்பட நேர்ந்தாலும் இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தடுமாற்றமில்லாத அறிவுடையவர்கள் வறுமையுற்றுத் துன்பம் அடைந்துவிட்டாலும் இகழத்தக்க காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அசைவு இல்லாத தெளிவினையுடையவர்கள், தாம் துன்பம் அடைய நேரிட்டாலும் அது நீங்குதற் பொருட்டு இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
தமிழ்க்குழவி உரை:
கலங்காத சிந்தனையுடையவர்கள் வாழ்வில் எவ்வளவு தான் இன்னல்பட்டாலும் இழிவானச் செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
Translation
Though troubles press, no shameful deed they do, Whose eyes the ever-during vision view.
Explanation
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
Transliteration
Itukkan Patinum Ilivandha Seyyaar Natukkatra Kaatchi Yavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 654