Thirukural

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்திறப்பாடு இலாஅ தவர்.

(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் - செய்யப்படும் வினைகளை முன் அடைவுபட எண்ணி வைத்தும், செய்யுங்கால் அவை முடிவிலவாகவே செய்யாநிற்பர்; திறப்பாடு இலாதவர் - முடித்தற்கு ஏற்ற கூறுபாடு இல்லாதார். (அக்கூறுபாடாவன: வந்த இடையூறுகட்கு ஏற்ற பரிகாரம் அறிந்து செய்தலும், தாம் திண்ணியராதலுமாம். பிழையாமல் எண்ண வல்லராய் வைத்தும் செய்து முடிக்கமாட்டாரும் உளர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அமைச்சருள் விடப்படுவாரது குற்றம் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அடைவுபட எண்ணியும் தம்மால் முடிவது இல்லாதவற்றையே செய்யா நிற்பர்; வினை செய்யுந் திறன் இல்லாதார். இஃது எண்ணவல்லாராய் வினை செய்ய மாட்டாரென்று கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
திறப்பாடு இலாதவர் -வினையைச் செய்து முடிக்கும் திறமையில்லாதவர்; முறைப்படச் சூழ்ந்தும் -செய்யவேண்டிய வினைகளை ஒழுங்குபட எண்ணிவைத்தும் ; முடிவிலவே செய்வர் - செய்யுங்கால் முற்றுப் பெறாதனவாகவே விடுவர். திறப்பாடாவது , வந்த வந்த இடையூற்றை உடனுடன் விலக்குதலும் ஆள் வினையில் உறுதியாயிருத்தலுமாம். 'இலாஅ' இசை நிறையளபெடை. திறப்பாடிலாதவர் பழுதெண்ணுவாரைப்போல் தண்டனைக்குரியவ ரல்லரேனும் விலக்கப் படவேண்டியவரே என்பது கருத்தாம்
கலைஞர் உரை:
முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
செயல்திறம் இல்லாத அமைச்சர், செய்ய வேண்டியவற்றை முறையாக எண்ணி வைத்திருந்தாலும், அவற்றைச் செய்யும்போது அரைகுறையாகவே செய்வார்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(தப்பான யோசனை சொல்லுகிற மந்திரியால் அபாயம் வந்துவிடும். திறமையில்லாத மந்திரியால் நல்ல காரியமும் கெட்டுப் போகும்.) சரியானபடி ஆராய்ந்து ஆலோசித்திருந்த காரியத்தையும், காரியத் திறமையில்லாத மந்திரிகள் அது முடியாதபடி கெடுத்து விடுவார்கள்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
முடிப்பதற்கு ஏற்ற கூறுபாடுகள் அறியாத வர்கள், செய்யப்படும் தொழில்களை முன்பாகவே நன்கு எண்ணி வைத்திருந்தும் செய்யும்போது அவை முடியாத அடியே செய்வார்கள்.
தமிழ்க்குழவி உரை:
நன்றாக ஆய்ந்து நல்ல முடிவுகள் எடுத்தாலும், திறன் வாய்க்கப் பெறாதவர்கள் செயல்படுத்த முனையின் தீமையே விளையும்.
Translation
For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution fails.
Explanation
Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright.
Transliteration
Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa Thavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 640