Thirukural

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அறத்தை அறிந்தவனாய், அறிவு நிறைந்து அமைந்த சொல்லை உடையவனாய், எக்காலத்திலும் செயல்செய்யும் திறன் அறிந்தவனாய் உள்ளவன் ஆராய்ந்து கூறும் துணையாவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசனால் செய்யப்படும் அறங்களை அறிந்து, தனக்கு ஏற்ற கல்வியான் நிறைந்து அமைந்த சொல்லை உடையனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்தும் வினை செய்யும் திறங்களை அறிந்தான்; தேர்ச்சித் துணை - அவற்குச் சூழ்ச்சித் துணையாம். (தன் அரசன் சுருங்கிய காலத்தும், பெருகிய காலத்தும், இடைநிகராய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதனை 'ஒடு' உருபின் பொருட்டாய ஆன் உருபாக்கி உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அமைச்சரது குணத்தன்மை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
அறத்தினையும் அறிந்து, நிரம்பியமைந்த சொல்லினையும் உடையனாய் எல்லாக்காலத்தினும் செய்யுந் திறன்களையும் அறியவல்லவன் அரசற்குச் சூழ்ச்சித் துணையாய அமைச்சனாவான்.
தேவநேயப் பாவாணர் உரை:
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் - அரசியலறங்களை யறிந்து தனக்குரிய கல்விநிறைந்து அடங்கிய சொல்லையுடையவனாய்; எஞ்ஞான்றும் திறன் அறிந்தான் - எக்காலத்திற் கேற்பவும் வினைசெய்யுந் திறங்களை அறிந்தவன் , தேர்ச்சித் துணை - அரசனுக்குச் சூழ்ச்சித் துணையாவான். இயற்கையால் தட்பவெப்பநிலை வேறுபட்டகாலங்களும், அரசனது செல்வநிலை வேறுபட்ட காலங்களும், பகையரசன் முன்னறிவிப்பின்றித் திடுமென்று வந்து தாக்குங்காலமும் உட்பட , 'எஞ்ஞான்றும்' என்றார். 'சொல்லான்' என்பதன் ஈற்றை ஒடுவுருபின் பொருள தாகிய ஆனுருபாகக் கொண்டு உரைப்பினும் பொருள் சிதையாதாம்.
கலைஞர் உரை:
அறத்தை அறிந்து கல்வியால் நிறைந்து, அடக்கமான சொல்லை உடையவராய், எப்போதும் செயலாற்றும் முறைகளைத் தெரிந்தவரே கலந்து முடிவு எடுப்பதற்கு ஏற்ற துணையாவார்.
சாலமன் பாப்பையா உரை:
அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அதனுடன்) தர்மாதர்மங்களைச் சீர்தூக்கி, நிறைந்த அறிவுடன் பொருத்தமான யோசனை சொல்லுகிறவனாகவும் எந்த நேரத்திலும் தன்னுடைய அரசனுடைய வலிமைகளின் கணக்கறிந்தவனாகவும் உள்ளவனே சரியான மந்திரி.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
செய்ய வேண்டிய அறம் இன்னது என்று அறிந்து ஏற்ற கல்வியால் அமைத்து சொல்லினையுடையவனாக, எக்காலத்திலும் தொழில் செய்யும் திறன்களையுடைய அமைச்சனே மன்னனுக்குச் சிறந்த துணையாவான்.
தமிழ்க்குழவி உரை:
அறவழிகளைத் தேர்ந்தவன், ஆன்றமைந்த சொல் வல்லான், பணிகளைத் திறம்பட செய்துமுடிப்பவன் மன்னர்க்குச் சிறந்த துணை ஆவான்.
Translation
The man who virtue knows, has use of wise and pleasant words. With plans for every season apt, in counsel aid affords.
Explanation
He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (of performing actions).
Transliteration
Aranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun Thiranarindhaan Therchchith Thunai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 635