Thirukural

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்ஒன்னார் விழையுஞ் சிறப்பு.

ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக்கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இன்னாமை இன்பம் எனக்கொளின் - ஒருவன் வினைசெய்யும் இடத்து முயற்சியான் வரும் துன்பந்தன்னையே தனக்கு இன்பமாகக் கற்பித்துக் கொள்வானாயின்; தன் ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் தன் பகைவர் நன்கு மதித்தற்கு ஏதுவாய உயர்ச்சி உண்டாம். (துன்பந்தானும் உயிர்க்கு இயல்பன்றிக் கணிகமாய் மனத்திடை நிகழ்வதோர் கோட்பாடு ஆகலின், அதனை மாறுபடக் கொள்ளவே, அதற்கு அழிவுஇன்றி மனமகிழ்ச்சி உடையனாய், அதனால் தொடங்கிய வினை முடித்தே விடும் ஆற்றல் உடையனாம் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் மெய்வருத்தத்தான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
மணக்குடவர் உரை:
இன்னாமையை இன்பம்போலக் கொள்வானாயின் அது தன் பகைவரும் விரும்புவதொரு சிறப்பாம். மேற்கூறியவாற்றால் செய்தலே யன்றித் துன்பத்தையும் இன்பமாகக் கொள்வனாயின் அவனைப் பகைவரும் மதிப்பரென்றவாறு.
தேவநேயப் பாவாணர் உரை:
இன்னாமை இன்பம் எனக்கொளின் -ஒருவன் தன் வினைமுயற்சியால் வருந்துன்பத்தைத் தனக்கு இன்பமாகக் கருதுவானாயின்; தனக்கு ஒன்னார் விழையும் சிறப்பு ஆகும் - அதனால் அவன் பகைவரும் அதனை விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும். இறைவனால் தடுக்கப்படாத எல்லா வினைக்கும் துன்பம் ஒன்றே தடையாதலின் , அத்துன்பத்தை இன்பமாகக் கொள்பவன் தொடங்கிய வினை யெல்லாம் வெற்றியாக முடியும் என்பது கருத்து. ஒன்னார் விழைதலாவது பாராட்டிப்பகை தீர்தல். 'கொளின்' என்பது கொள்வதன் அருமை யுணர்த்திநின்றது, துன்பத்தை இன்பமாகக் கொள்வது ஓகத்தால் ஓதி (ஞானம்) பெற்ற துறவியர் இயல்பாதலின், அவ்வுயர்நிலை யடைந்தமை பற்றி 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' உண்டாகும் எனினுமாம்.
கலைஞர் உரை:
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் செயல் செய்யும்போது துன்பம் வந்தால் மனம் தளராமல் அதையே இன்பம் எனக் கொள்வான் என்றால், பகைவராலும் மதிக்கப்படும் சிறப்பு அவனுக்கு உண்டாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(இன்பத்தில் மயங்காமலிருந்தால் துன்பம் பாதிக்காது. அப்படியிருப்பது சிறந்த குணம். அதைவிடச் சிறந்த குணம் உண்டு. அது என்னவெனில்) துன்பத்தையே இன்பமாக அனுபவிப்பது. அந்தக் குணம் பகைவர்களாலும் பாராட்டத்தக்க பெருமை உடையது. (அதுதான் 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று முதலில் சொல்லப்பட்டது.)
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
ஒருவன் தனக்கு வந்த துன்பத்தினையே இன்பமாகக் கற்பித்துக் கொண்டு இருக்கின்ற தன்மை யுடையவனானால், அத்தன்மை அவனுடைய பகைவர் களும் நன்கு மதிக்கும் முயற்சியினை அவனுக்கு உண்டாக்கி விடும்.
தமிழ்க்குழவி உரை:
துன்பத்தையே வாழ்வின் இன்ப நிலையாகக் கருதும் இயல்பு நிலை ஒருவன் பெறின் பகைவர்களிடம் கூட அவனுக்குப் பெருஞ்சிறப்பு உண்டாகும்.
Translation
Who pain as pleasure takes, he shall acquire The bliss to which his foes in vain aspire.
Explanation
The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure.
Transliteration
Innaamai Inpam Enakkolin Aakundhan Onnaar Vizhaiyunj Chirappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 630