|
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு - உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம். (தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல்,மேல் 'ஓர்ந்துகண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தங்கருமத்திற்கு அழிவு வாராமற் கண்ணோட வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமையாதலை உடையது.
இது நற்குணமாவது கண்ணோட்டமாயினும் அரசர்க்குப் பொருட்கேடு வாராமல் கண்ணோடவேண்டுமென்று கூறிற்று.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - நடுநிலையாக முறை செய்யவேண்டிய தம் கடமை தவறாமல் கண்ணோட வல்ல அரசர்க்கு ; இவ்வுலகு உரிமை உடைத்து - இவ்வுலகம் நிலையான உரிமையாகுந் தன்மை யுடையதாம்.
'கருமஞ் சிதையாமல் ' என்பதால் இவ்வதிகாரத்திற் கூறப்பட்டது நெறிதவறாத நற்கண்ணோட்டமே என்பது அறியப்படும். முறை தவறுமிடத்துக் கண்ணோடாமையும், தவறாவிடத்துக் கண்ணோடுதலும் அமைவது அருமையாதலின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றார். தவறுமிடமாவது கண்ணன்ன கேளிர் குற்றஞ் செய்யின் தண்டிக்க விரும்பாமை. தவறாமிடமாவது தன்னால் வெறுக்கப் படுபவன் குற்றஞ் செய்யாவிடினுந் தண்டிக்கவும் சிறு குற்றஞ் செய்யினும் பெருந்தண்டனை யிடவும் விரும்புதல். இவ்விரண்டு மின்றி நடுநிலை முறையும் நற்கண்ணோட்டமும் செய்வார்க்குக் குடிகளெல்லாரும் என்றும் அன்புடன் அடங்கி நடப்பாராகலின், 'உரிமையுடைத்திவ் வுலகு ' என்றார்.'உலகு ' அதன் பகுதியாகிய நாட்டைக் குறித்தலின் முதலாகு பெயர்.
|
|
கலைஞர் உரை:
|
|
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக
இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆனால் கண்டவர்களுக்கெல்லாம் தாட்சிண்ணியம் காட்டினால் நியாயம் தவறிக் காரியமும் கெட்டுப்போகாதா என்றால் உண்மைதான். காரியம் கெடாமல் கண்ணோட்டமும் செய்வது மிகவும் கடினமே. ஆனாலும், அப்படிச் செய்கிறவர்களும் உண்டு. அவர்களுக்குக்) காரியமும் கெடாமல் தாட்சிண்ணியமும் காட்டி உபகாரம் செய்யக்கூடிய மகான்கள் உண்டு. அவர்களுக்கு இவ்வுலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
முறை செய்தலாகிய தனது தொழில் கெடாமல் கண்ணோட்டம் செலுத்த வல்லவனுக்கு இவ்வுலகம் உரியதாகிய தன்மையுடையது.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
செய்கின்ற காரியத்தில் கருத்தூன்றி அருட்பார்வையுடன் அறவழியில் செய்து முடிப்பார்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
|
|
Translation
|
|
Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won.
|
|
Explanation
|
|
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).
|
|
Transliteration
|
|
Karumam Sidhaiyaamal Kannota Vallaarkku
Urimai Utaiththiv Vulaku
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|