|
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை. (கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்- கண்ணோட்ட மில்லாதவர் கண்ணில்லாதவரே யாவர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர் எப்போதேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார்.
காட்சியினாற் கொள்ளும் சிறந்த பயன் இன்மையால் 'கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் ' என்றார். அதை வற்புறுத்தவும் குறள் நிரம்பவும் பின்னும் அதை எதிர்மறை முகத்தாற் கூறினார். உம்மை இறந்தது தழுவிய எச்சம்.
|
|
கலைஞர் உரை:
|
|
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்;
கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதவரே; கண் இருப்பவர் கண்ணோட்டம் இல்லாதவராக இருப்பதும் இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஆகையினால்) தாட்சிண்ணிய குணம் இல்லாதவர்கள் பிறருடைய தராதரத்தைக் கண்டறிய முடியாத குருடர்கள். ஆராய்ந்தறியக்கூடிய கண்களை உடையவர்கள் தாட்சிண்ணியம் இல்லாமல் நடந்துகொள்ள மாட்டார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையரும் அல்லர்; கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருப்பதும் இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
அருள்நோக்கு இல்லாதவர்களைக் கண்களில்லாதவர்கள் என்றே கூறலாம். உண்மையில் கண்கள் உடையவர்கள் என்றால் அருள் பார்வை உள்ளவர்களாகவே இருப்பர்
|
|
Translation
|
|
Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.
|
|
Explanation
|
|
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
|
|
Transliteration
|
|
Kannottam Illavar Kannilar Kannutaiyaar
Kannottam Inmaiyum Il
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|