|
எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும்.
எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை ( நியாயம் ) வேண்டினவர்க்குக் காட்சிக் கெளியனாயிருந்து , அவர் சொல்லியவற்றை அறநூலறிஞருடன் ஆராய்ந்து , உண்மைக் கேற்பத் தீர்ப்புச் செய்யாத அரசன் ; தண்பதத்தான் தானேகெடும் - தாழ்ந்த நிலையில் நின்று தானே கெடுவான்.
"அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம்" (சிலப்பதிகாரப் பதிகம் . 55) என்றதற் கேற்ப , முறை செய்யா அரசன் பகைவரின்றியுந் தானே கெடுவான் என்பதாம் . பதம் நிலைமை . எண்மை எளிமை. 'எண்பதத்தான்' குறிப்பு முற்றெச்சம் . 'ஓரா' செய்யா என்னும் வாய்ப்பாட்டு (இறந்தகால வுடன்பாட்டு ) வினையெச்சம் . 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் . 'தண்பதம்' பழியும் பளகும் (பாவமும் ) அடைந்து நிற்கும் நிலை . ஏகாரம் பிரிநிலை.
|
|
கலைஞர் உரை:
|
|
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு
தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(நீதி செலுத்துவதில் அரசன் தயை தாட்சணியமின்றிக் கண்டிப்பாக இருக்க வேண்டும்.) ஓர் அரசன் தன் பதவிக்கு எண்ணப்பட்ட தன்மையோடு குற்றங்களை விசாரித்துக் கண்டிப்பான நீதி செலுத்தாமல் இரக்கம் காட்டுவதனாலேயுங் கூடச் செங்கோன்மை கெட்டுப்போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
எல்லோரும் எளிமையாகக் காண முடிகின்றவனாகி, ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த பாவமும் பழியும் அடைந்து கெடுவான்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மக்கள் எளிதாகக் கண்டு தம் குறைகளைக் கூற வாய்ப்பளித்து அவற்றைக்களைவதற்கு ஆவன செய்யாத மன்னவன் தாழ்நிலை உற்றுத் தானே கெடுவான்.
|
|
Translation
|
|
Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.
|
|
Explanation
|
|
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
|
|
Transliteration
|
|
Enpadhaththaan Oraa Muraiseyyaa Mannavan
Thanpadhaththaan Thaane Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|