|
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுடைய மனைவி நற்குண நற்செய்கைச் சிறப்புடையவளானால் அவனுக்கு இல்லாதது எது?; இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அம்மனைவி அச்சிறப்பில்லாதவளானால் அவனுக்கு உள்ளது எது?
மாண்பு என்னும் பண்பின் பெயர் பண்பியின்மேல் நின்றது. இல்லறத்திற்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் குணச் சிறப்பே என்பது இதனாற் கூறப்பட்டது.
|
|
கலைஞர் உரை:
|
|
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம் இருப்பதுதான் என்ன?.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(மற்ற எது இல்லாவிட்டாலும்) குடும்பத்துக்குப் பெருமை தரும் குணங்கள் மட்டும் மனைவியிடத்தில் இருந்தால் அந்த வீட்டில் இல்லாதது ஒன்றுமில்லை. அந்த நற்குணங்கள் மனைவியிடத்தில் இல்லாமற் போனால் அங்கே என்ன இருந்தாலும் ஒன்றும் இல்லாதது போன்றதுதான்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மணவை சிறப்புடையவளாக இருந்துவிட்டால் அவ் இல்வாழ்க்கையில் இல்லாத தொன்றுமில்லை. அவளை மனைக்குரிய சிறப்பு இல்லாதவளாகி விட்டால் இல்லறத்தில் உள்ளது ஒன்றுமில்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மனைவி நற்பண்புகளுடன் அமையப் பெற்றால் ஒருவனுக்கு வாழ்வில் இல்லாததென்று எதுவுமே இல்லை; மாறாக அவ்வாறு அமையாவிடின் வாழ்வில் சிறப்பென்பதெதுவுமே இல்லை.
|
|
Translation
|
|
There is no lack within the house, where wife in worth excels, There is no luck within the house, where wife dishonoured dwells.
|
|
Explanation
|
|
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.
|
|
Transliteration
|
|
Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|