Thirukural

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்.

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது தெளியா தொழிக, தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக - ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக. ('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)
மணக்குடவர் உரை:
யாவரையும் ஆராயாது தெளியாதொழிக; ஆராய்ந்த பின்பு அவராற் றேறப்படும் பொருளைத் தேறுக. இஃது ஒருபொருளிற் றேற்றமுடையாரை எல்லாப் பொருளினும் தெளிக வென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
யாரையும் தேராது தேறற்க - எத்துணைச் சிறந்தவரையும் எவ்வினைக்கும் ஆராயாது தெளியற்க ; தேர்ந்தபின் தேறும் பொருள்தேறுக - ஆராய்ந்து ஒருவரைத் தெளிந்தபின் அவரைநம்பி அவரிடம் ஒப்படைக்கக்கூடிய வினைகளைப்பற்றி ஐயுறற்க. உம்மை சிறப்பின்பாற் பட்டது . வினைவகையில் , 'தேறற்க' என்றது பொதுத்தேர்வும் தேறுக என்றது சிறப்புத்தேர்வும் பற்றியனவாகும். 'பொருள்' ஆகுபொருளது.
கலைஞர் உரை:
நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பி விடக் கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(நம்பத் தகுந்தவர்கள் என்று தெரிந்தவர்களிலும் எல்லாரும் எல்லாக் காரியத்துக்கும் தகுதியுள்ளவர்களாக இருக்க முடியாது. அதனால்) ஆராய்ந்தறியாமல் யாரையும் நம்பிவிடக் கூடாது. ஆராய்ந்தறிந்து நம்பத் தகுந்தவன் என்று தெரிந்த பின், அவன் எந்தக் காரியத்துக்கு ஏவத் தகுந்தவன் என்பதையும் ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
யாரையும் ஆராய்ந்து பாராமல் தெளிய வேண்டா, ஆராய்ந்த] பின் தெளியப்படும் பொருள்களை ஐயுறாமல் (சந்தேகிக்காமல்) தெளிதல் வேண்டும்.
தமிழ்க்குழவி உரை:
யாரையும் உரிய ஆய்வின்றி தேர்வு செய்யக் கூடாது. தேர்வு செய்த பின் அவருக்கேற்ற பணியையே அவருக்கு வழங்கல் வேண்டும்.
Translation
Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide.
Explanation
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
Transliteration
Therarka Yaaraiyum Theraadhu Therndhapin Theruka Therum Porul

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 509