|
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பகை கொள்ளும் வலியுடையவர்க்கும் அரணைச் சேர்ந்தாகின்ற ஆக்கம் பலபயனையுந் தரும்.
இது பகைவரிடம் அறிதலே யன்றித் தமக்கு அமைந்த இடமும் அறிய வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலிமையோர்க்கும் ; அரண்சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்ததனாலுண்டாகும் மேம்பாடு பல நலங்களையும் தரும் .
மாறுபாடாவது மாநிலம் எல்லார்க்கும் பொதுவென்னும் பகைவர் சொல்லைப் பொறாத அரசர் மனத்திலெழும் வயிரம் . மாறுபாடும் வலியும் ஒருங்கே கூறியதனால் , இது பகைமேற்சென்ற வல்லரசர் செயலாயிற்று . உம்மை உயர்வு சிறப்பு . அரண் , ஆறும் மலையும் போல் இயற்கையும் , அகழியும் மதிலும் போற் செயற்கையும் ஆக இருவகைப்படும் . ஆக்கம் வலிமேம்பாடு . அது தரும் நலங்கள் பகைவரால் தமக்குத் தாக்குதலின்மையும் தாம் நிலையூன்றி அவரைத்தாக்கி வெல்லுதலுமாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச்
சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) பலவிதமான திறமைகள் உள்ளவர்களுக்கும் பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்திருப்பதால் கிடைக்கக் கூடிய வல்லமை பல நன்மைகளைத் தரும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மாறுபாட்டுடன் கூடிய மனத்தினையுடைய வலிமை நிறைந்த அரசர்க்கு அரனைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பற்பல பயன்களைக் கொடுப்பதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
மாறுபட்ட வலிமையுடையவர்களாக இருந்தாலும் கூட பாதுகாப்பு அரண் அமையப் பெறுவார்களாயின் அது வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்
|
|
Translation
|
|
Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.
|
|
Explanation
|
|
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages.
|
|
Transliteration
|
|
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|