|
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும். (அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும்.
பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தன் செல்வத்தின் அளவறிந்து அதற்கேற்ப வாழாதவனின் வாழ்க்கையில் ; உளபோல இல் ஆகித்தோன்றாக் கெடும் - அவன் பல்வகைப் பட்ட பொருள்களும் உள்ளனபோலத்தோன்றி உண்மையில் இல்லாதனவாய்ப் பின்பு அப்பொய்த்தோற்றமும் இல்லாது அழியும் .
அளவறிந்து வாழ்தலாவது , செலவை வரவிற்குச் சுருக்காவிடினும் அதற்கு ஒப்பவாவது செய்து ஈந்தும் நுகர்ந்தும் வாழ்தல் . தொடக்கத்திற்கேடு வெளிப்பட்டுத் தோன்றாமையின் 'உளபோல இல்லாகி 'என்றார் .
"முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியு முளமே
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே."
(புறம் . 110)
என்பது ஒருவாறு இக்குறட்கு எடுத்துக்காட்டாம் .
|
|
கலைஞர் உரை:
|
|
இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின்
அளவு அறிந்து செயல்திட்டங்களை வகுத்துக்கொள்ளாவிட்டால்,
வலிமையோ அல்லது வளமோ இருப்பது போல் தோன்றினாலும்கூட
இல்லாமல் மறைந்து போய்விடும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
அளவறிந்து அதற்குத் தக்கபடி வாழ்க்கை நடத்தாத வனுடைய ஆடம்பரச் சிறப்பு, இருப்பதுபோல் இருந்து இல்லாமற் போய் மீண்டும் தலைதூக்க முடியாமல் கெட்டுப்போகும்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து அதற்கேற்ப வாழாதவன் வாழ்க்கை, இருப்பது போலத் தோன்றி உண்மையாகவே இல்லாததாகி, பிறகு அத் தோற்றமும் இல்லாமல் கெட்டுவிடும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
வருவாய்க்குத் தக்கச் செலவு செய்து வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போலத் தோன்றி ஒருநாள் இடர்ப்பட்டு இல்லாமல் ஆகக் கூடும்.
|
|
Translation
|
|
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.
|
|
Explanation
|
|
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
|
|
Transliteration
|
|
Alavara�ndhu Vaazhaadhaan Vaazhkkai Ulapola
Illaakith Thondraak Ketum
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|