|
பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு)
விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின். ('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்.
இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் - அரசர்க்குப் பொருள் வருவாயின் அளவு சிறிதாயினும் ; போகு ஆறு அகலாக்கடை - செல்வாயின் அளவு அதினும் மிகாதவிடத்து ; கேடு இல்லை - கெடுதல் இல்லை .
இது சிக்கனத்தின் நன்மையை எளிய கணக்கு முறையால் விளக்குவது . அளவு என்பது பின்னுங் கூட்டியுரைக்கப் பட்டது . 'அகலாக்கடை 'என்றதனால் , வரவுஞ்செலவும் ஒத்திருப்பினுங் கேடில்லை யென்பதாம் .
ஒரு குளத்திற்குள் நீர்வந்து விழும் வாய்க்காலினும் அதினின்று நீர்வெளியேறும் வாய்க்கால் அகன்றிராவிடின் அக்குளநீர் குன்றாது என்பதே, பிறிதுமொழிதற் குறிப்புக்கொண்ட இக்குறட்பொருள்.
|
|
கலைஞர் உரை:
|
|
எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக
இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(ஏனென்றால்) ஒருவனுக்கு வரும்படி குறைவாக இருந்தாலும் பாதகமில்லை. செலவுமட்டும் வரவுக்கு அதிகப் படாமல் இருந்தால் கெடுதி வராது.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செலவு செய்யப்படுகின்ற வழியின் அளவு அதனைவிடப் பெரிதாக இல்லாமலிருந்தால் பொருள் வருகின்ற வழியளவு சிறிதாக இருந்தாலும் அதனால் கெடுதி இல்லை.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவருடைய வருமானம் குறைவாக இருந்தாலும் ஒன்றும் பழுதில்லை. அவர் தம் செலவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
|
|
Translation
|
|
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.
|
|
Explanation
|
|
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.
|
|
Transliteration
|
|
Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|