Thirukural

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை.

அறத்தின் இயல்பொடு இல்வாழ்கை வாழ்கிறவன்- வாழ முயல்கிறவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகிறவன் ஆவான்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் - இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்; முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத் துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும் கூறினார்.)
மணக்குடவர் உரை:
நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவனென்பான், முயல்வாரெல்லாரினுந் தலையாவான். முயறல்- பொருட்கு முயறல்.
தேவநேயப் பாவாணர் உரை:
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் - முறைப்படி இல்லறவாழ்க்கை வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்; முயல்வாருள் எல்லாம் தலை - பற்றறுக்க முயலும் துறவு நெறியார் எல்லாருள்ளும் தலைமையானவனாம். முற்றத்துறந்தார் யாரென மக்களால் அறியப் படாமையின், 'முயல்வாருளெல்லாம்' என்றும், இருவகை யறத்தார்க்கும் உதவியே வீடு பெறுதலின் 'தலை' என்றுங் கூறினார். என்பான் என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப்பொருளது.
கலைஞர் உரை:
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
சாலமன் பாப்பையா உரை:
கடவுளை அறியவும், அடையவும் முயல்பவருள் மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு வாழ்பவனே முதன்மையானவன்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
ஏனென்றால், சரியான முறையில் இல்வாழ்க்கை நடத்துகிற குடும்பி, மேலான வாழ்வு பெறத் தவநெறியில் முயற்சி செய்கிறவர்கள் எல்லாரிலும் சிறந்தவன்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
இல்லறத்திற்குரிய இயல்புகளுடனே இல்வாழ்க்கை நடத்துபவன், ஆசைகளை அடக்கிவாழும் துறவிகள் எல்லோரினும் மேலானவன்.
தமிழ்க்குழவி உரை:
அறநெறியில் நின்று இயல்பான இல்லறம் மேற் கொள்பவரே வாழ்வில் உயர்நிலையடைய முனைந் திடுவோருள் தலையாயவராகக் கருதப்படுவார்.
Translation
In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost place
Explanation
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
Transliteration
Iyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan Muyalvaarul Ellaam Thalai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 47