Thirukural

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ எவன்.

ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று பெறத்தக்கது என்ன?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல் வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்; புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார், போஒய்ப் பெறுவது எவன் என்றார்.)
மணக்குடவர் உரை:
இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின் புறநெறியாகிய தவத்திற் போய்ப் பெறுவது யாதோ?. மேல் சீலனாய்க் கொடுக்க வேண்டுமென்றார் அவ்வாறு செய்யின் தவப்பயனும் இதுதானே தருமென்றார்.
தேவநேயப் பாவாணர் உரை:
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல்லறவாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி நடத்துவானாயின்; புறத்தாற்றில் போய்ப் பெறுவது எவன் - அதற்குப் புறம்பாகியதுறவு நெறியிற் போய்ப் பல்வகையில் துன்புறுவதல்லது சிறப்பாகப் பெறும் பயன் யாது? அறத்தாறு என்றது அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றியறிதல், நடுநிலைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, பிறனில் விழையாமை, பொறையுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, புறங்கூறாமை, பயனிலசொல்லாமை, தீவினை யச்சம், ஒப்புரவறிதல், ஈகை என்னும் பதினாறறத் தொகுதியை. இல்லறத்தாலும் வீடுபேறுண்டாமென்பது தமிழர் கொள்கையாதலின், துறவறத்தினால் மட்டும் வீடுபெற முடியும் என்னும் ஆரியக் கொள்கையை மறுத்து, இல்லறத்தில் தானும் இன்புற்றுப் பிறர்க்கும் ஒல்லும் வகையால் அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செய்து இறுதியில் பேரின்பமும் பெறுவதாயிருக்க; துறவறத்திற் போய்ப் பசிபட்டினியாலும் தட்பவெப்ப மிகையாலும் துன்புற்றும் ஒருவர்க்கும் ஒருவகையிலும் உதவாதும், கூடாவொழுக்கத்திற் காளாகியும், ஒருகால் இறுதியிற் பிறவாவீடுபெறினும் சிறப்பாகப் பெறுவது எதுதானென்று வினவுகின்றார் ஆசிரியர். சிவனடியார் பலர் இல்லறத்தில் நின்றே வீடு பெற்றாரென்று பெரிய புராணங் கூறுதல் காண்க. போஒய் என்பது இசைநிறை யளபெடை.
கலைஞர் உரை:
அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாது.
சாலமன் பாப்பையா உரை:
மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
தர்மநெறி தவாறமல் மனைவி மக்களோடு இல்வாழ்க்கை நடத்தினால் ஒருவன்துறவறத்துக்குப் போய் அடையக்கூடிய நன்மை என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறநெறியில் இல்வாழ்கையினை ஒருவன் நடத்துவானேயானால், அப்படிப் பட்டவர்கள் அதற்குப் புறம்பான வேறு வழிகளில் சென்று பெறுவது யாது?
தமிழ்க்குழவி உரை:
அறத்தின் வழிநின்ற இல்வாழ்க்கை எல்லா நலன்களும் தரும், இது தவிர்த்து துறவு வாழ்க்கையை ஒருவர் விழைவதால் யாது பயன்?
Translation
If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?
Explanation
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
Transliteration
Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril Pooip Peruva Thevan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 46