|
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து ('நான்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.
|
|
மணக்குடவர் உரை:
|
|
மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து.
இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
மனநலம் நன்கு உடையராயினும் -மனநன்மையை இயற்கையாகவே மிகுதியாக வுடையராயினும்; சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து - அறிவு நிறைந்தோர்க்கு இனநன்மை அரணாகுந் தன்மையுடையது.
மனநலம் பிறப்பிலேயே அமையினும் அது முன்னோரிடமிருந்து பெற்ற மரபுரிமையாயிருக்கலா மாதலால், அதுவும் ஒருவகையில் இனநலத்தால் அமைவதே. இயற்கையான மனநலத்தையும் இனநலம் வளர்த்து உறுதிப்படுத்துவதால், அதற்கு 'ஏமாப்புடைத்து' என்றார். உம்மை இயற்கை மனநலத்தின் அருமையை உணர்த்திற்று. இது மறுதலைக் கொள்கையை ஒருமருங்கு தழுவியதாகும்.
'நன்கு' என்பதற்கு 'நல்வினையால்' என்று பொருள்கொண்டார் பரிமேலழகர். அது பொருந்துமேனும் அதுவே திட்டமான ஆசிரியர் கருத்தென்பதற்குக் குறளில் ஒரு குறிப்புமில்லை. அதுவே அவர் கருத்தாயின், மனநல நல்வினைப்பேறாயினும் என்றோ, மனநல மூழான் மருவினும் என்றோ யாத்திருப்பர். எனினும் மரபுரிமைப் பேறாகவோ நல்வினைப் பேறாகவோ திருவருட்பேறாகவோ அவர் கொண்டிருக்கலாமென்று கருத இடமுண்டு.
|
|
கலைஞர் உரை:
|
|
மனவளம் மிக்க சான்றோராக இருப்பினும் அவர் சேர்ந்துள்ள
கூட்டத்தினரைப் பொறுத்தே வலிமை வந்து வாய்க்கும்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(வாழ்க்கைச் சிறப்புக்களைக் கருதாவிட்டாலும்) மேலோர்கள் தம்முடைய மனநலம் கெட்டுப் போகாமலிருக்கப் பாதுகாப்பாகத் தாம் சேரும் இனம் நல்லதாக இருக்கவே விரும்பு வார்கள்.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத் தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற பெரியோர்களுக்கு சேர்ந்த இனம் நன்றாக இருப்பது, காப்பான வலிமை உடையதாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
ஒருவர் மனநலம் மிக்கவராக இருப்பினும், அவர் சார்ந்திருக்கும் இன நலம் எல்லா பாதுகாப்பையும் வழங்கும்.
|
|
Translation
|
|
To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.
|
|
Explanation
|
|
Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
|
|
Transliteration
|
|
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|