Thirukural

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்வன்மையு ளெல்லாந் தலை

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)
மணக்குடவர் உரை:
தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
தேவநேயப் பாவாணர் உரை:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் -அறிவு முதலியவற்றால் தம்மினும் பெரியவர் தமக்குத் துணைவராமாறு அவர் வழிநின் றொழுகுதல்; வன்மையுள் எல்லாம் தலை -அரசர்க்குரிய வலிமைக ளெல்லாவற்றுள்ளுந் தலையானதாம். படை, அரண், பொருள், நட்பு முதலிய வலிமைகளால் நீக்கப் படாத தெய்வத்துன்பங்களை நீக்குதற்கும், அடையப்பெறாத வெற்றியை அடைதற்கும், உதவும் பெரியார் துணை அவ்வலிமைகளினுஞ் சிறந்தது என்பதாம்.
கலைஞர் உரை:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
(அந்தப் பாக்கியம் கிடைத்துவிட்டால் பிறகு அப் பெரியவர் களே நம்முடைய காரியங்களைத் தம்முடைய காரியங்களாக முன்னால் நின்று நடத்துவார்கள். ஆனால்) தம்மைக் காட்டிலும் அறிவு, அனுபவம், திறமை முதலியவற்றில் பெரியவர்கள் தமக்கு எப்போதும் துணைவராக இருக்கப் பெறுவது தமக்குள்ள எல்லா வல்லமைகளிலும் சிறந்த வல்லமையாகும்.
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமையானதாகும்.
தமிழ்க்குழவி உரை:
தம்மினும் அறிவால் உயர்ந்த பெரியவர்களைச் சுற்றமாகக் கொண்டு அவர் சொற்படி ஒழுகுதல் திறமைகளுள் எல்லாம் தலையாய திறமையாகும்.
Translation
To live with men of greatness that their own excels, As cherished friends, is greatest power that with a monarch dwells.
Explanation
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
Transliteration
Thammir Periyaar Thamaraa Ozhukudhal Vanmaiyu Lellaan Thalai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >
Kural 444