|
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
|
|
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
|
|
பற்றுள்ளம் என்னும் இவறன்மை -பொருளை விடத்தகும் இடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளம் ஆகிய உலோபத்தினது தன்மை, எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - குற்றத் தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்று அன்று , மிக்கது. (இவறலது தன்மையாவது : குணங்கள் எல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவதொன்று அன்று' என்றார். 'எவற்றுள்ளும்' என்பது இடைக்குறைந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.)
|
|
மணக்குடவர் உரை:
|
|
கூடின பொருளை விடாமையாகிய உலோபம் யாதொன்றினுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று.
இஃது உலோபம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாமையால் ஒரு பொருளாக மதிக்கப்படா தென்றது.
|
|
தேவநேயப் பாவாணர் உரை:
|
|
பற்றுள்ளம் என்னும் இவறன்மை - பொருளைச் செலவிட வேண்டிய விடத்துச் செலவிடாது தன்னுடனேயே வைத்துக் கொள்ளுமாறு, உ ள் ள த் தா ல் அதை இறுகப்பற்றும் கஞ்சத்தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று - பிற குற்றங்களோடு சேர்த்தெண்ணப்படாது தனியாக வைக்க வேண்டிய ஒரு குற்றமாகும்.
கஞ்சத்தனம் எல்லா நற்குணங்களையும் அடக்கி அவற்றைப் பயன்படாவாறு செய்து விடுதலின், ' எற்றுள்ளும் எண்ணப்படுவ தொன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது ' எற்றுள்ளும் ' என இடைக்குறைந்து நின்றது.
|
|
கலைஞர் உரை:
|
|
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது
பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல்
வாழ்வதுதான்.
|
|
சாலமன் பாப்பையா உரை:
|
|
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை உரை:
|
|
(குற்றமென்று அறிந்த பின் ஒரு குற்றமான பழக்கத்தில் மிகுந்த பற்றுடையவனாக இருப்பதற்காகவாவது) குற்றம் செய்கிற ஒருவன் தனக்கு மிகவும் பற்றுடையனாக இருக்கிறான் என்பதற்காகவாவது குற்றத்தை நீக்காமல் அசட்டை செய்வது எந்த அறிவோடும் சேர்ந்ததல்ல.
|
|
திருக்குறள் வீ. முனிசாமி உரை:
|
|
செய்யவேண்டிய ஈகைச் செயல்களைச் செய்யாமல் கருமித்தனத்தால் பற்றுதலை வைத்திருக்கும் அத்தன்மை, குற்றமான தன்மைகளும் ஒன்றாக வைத்து எண்ணப்படுவதென்று அன்று; அது மிகுந்த குற்றமாகும்.
|
|
தமிழ்க்குழவி உரை:
|
|
பொருள்மீது அதீத பற்றுக் கொண்டு கருமித்தனத்தோடு வாழ்தல் என்பது எதனோடும் வைத்து எண்ணப்படாத பெருங்குற்றமாகும்.
|
|
Translation
|
|
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.
|
|
Explanation
|
|
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).
|
|
Transliteration
|
|
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru
|
|
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
|
|
|